ஜப்பானில் டோபாவின் தென்கிழக்குப் பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவரைக்கும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
ஜப்பானின் டோபாவின் தென்கிழக்கே 84 கிமீ தொலைவில் இன்று 13:38:26 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக இருந்தது என்று யு.எஸ்.ஜி.எஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 350 கி. மீட்டர் ஆழத்தில் இருந்து உருவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நேரத்தின்படி இன்று 14ஆம் தேதி மாலை 5.09 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் இதுவரை யாருக்கும் பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அந்த நாட்டின் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கும் தகவலில் ஃபுகுஷிமா அணு உலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளன. டோக்கியோவின் வடக்கே உள்ள ஃபுகுஷிமா மற்றும் இபராக்கி மாகாணங்கள், நில நடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோதிலும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தை வலுவாக உணர்ந்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் மற்றும் டோக்கியோ மெட்ரோ ஆகியவை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டன.