அமேசான் காடுகளையும் அசைத்த கொடூர கொரோனா..! பழங்குடியின சிறுவன் பலி..!

By Manikandan S R S  |  First Published Apr 13, 2020, 1:44 PM IST

உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடும் கொடிய கொரோனா வைரஸ் நோய் அமேசான் மழைக்காடுகளில் வாழும் பழங்குடியின மக்களையும் விட்டு வைக்கவில்லை.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் தற்போது உலகம் முழுவதும் பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து, இந்தியா என உலகின் 210 நாடுகளில் கொரோனா வைரஸ் கொத்துக்கொத்தாக உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி 18 லட்சத்து 46 ஆயிரத்து 680 பேரை பாதித்து 1,14,090 உயிர்களை காவு வாங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

Latest Videos

இப்படி உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடும் கொடிய கொரோனா வைரஸ் நோய் அமேசான் மழைக்காடுகளில் வாழும் பழங்குடியின மக்களையும் விட்டு வைக்கவில்லை. வெளியுலக தொடர்பு எதுவும் இல்லாமல் காடுகளில் வாழ்ந்து வரும் மக்களிடையேயும் கொரோனா பாதிப்பால் சோகம் ஏற்பட்டிருக்கிறது. பிரேசிலில் இருக்கும் அமேசான் மழைக்காடுகளில் யனோமாமி என்கிற பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்படவே ரோரைமா மாகாணத்தின் தலைநகர் போவா விஸ்டாவில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

அங்கு சிறுவனுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிமை சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு பழங்குடியின சிறுவன் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தான். எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோத தங்கச் சுரங்க தொழிலாளர்கள் மூலமாகவே சிறுவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக குற்றம் சாற்றப்பட்டுள்ளது. சிறுவன் மூலமாக அமேசான் காடுகளில் வாழும் பழங்குடி இன மக்கள் பலருக்கும் கொரோனா பரவி இருக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மக்களை தனிமைப்படுத்தி பிரேசில் அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதபடுத்தியுள்ளது.

click me!