உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.இதுவரை 140க்கும் அதிகமான குழந்தைகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பி சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது அண்டை நாடான உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. அன்று முதல் இன்று வரை உக்ரைனின் முக்கிய நகரங்களில் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ்,மரியுபோல், சுமி, லிவ் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
இந்த நிலையில், நேற்று முதல் உக்ரைனின் மேற்கு பகுதியில் இருக்கும் லிவ் நகரத்தில் தொடர்ந்து ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய படை ஈடுப்பட்டுள்ளது. ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் இராணுவமும் பதிலடிக் கொடுத்து வருகிறது. இதுவரை ரஷ்யா வீரர்கள் 14,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்ச்கம் தெரிவித்துள்ளது. மேலும் போர் தொடங்கியது முதல் தற்போது வரை எங்கும் தப்பித்து ஓடாமல் உக்ரைன் நாட்டிலே இருந்து எதிர் தாக்குதல் நடத்தி வருகிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. மேலும் என் மக்களை விட்டு எங்கும் போக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும் ரஷ்யாவின் கொடுர தாக்குதலால் உருகுலைந்த உக்ரைனுக்கு இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், லிவ் நகரத்தின் மத்தியில் இருக்கும் மைதானத்தில், போரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போர் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளை நினைவுகூரும் வகையில், பச்சிளம் குழந்தைகளை வைத்து இழுத்துச் செல்லும் ‘ஸ்ட்ரோலர்’ வண்டிகளை காலியாக நிறுத்தி வைக்கப்பட்டு, போரில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுதொடர்பாக புகைப்படங்கள் மனதை உருக்கும் வகையில் இருந்தது.
மேலும் ரஷ்யாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒவ்வொரு குழந்தைகளின் நினைவாக, 109 காலியான ஸ்ட்ரோலர்கள் வரிசையாக நிறுத்தி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது என்று உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 20 நாட்களுக்கு மேலாக உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், இராணுவ நடவடிக்கையில் பொதுமக்கள் யாரும் குறிவைக்கப்படவில்லை, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என ரஷ்ய தரப்பு தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.இதுவரை 140க்கும் அதிகமான குழந்தைகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனிடையே உக்ரைனின் மருத்துவமனை, மக்கள் குடியிருப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் நாள்தோறும் தீவிரம் அடைந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில், லிவ், கிவ் ஆகிய நகரங்களில் புறநகர்ப் பகுதியில் சண்டை கடுமையாகியுள்ளது.