மூன்று வார பயணத்தை தங்கரோவா கப்பலிலில் மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் 800 கிலோமீட்டர் நீளமுள்ள பவுண்டி ட்ரூவ் ஆழ்கடல் பகுதியை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர்.
நியூசிலாந்தின் தெற்கு தீவின் கடற்கரையில் உள்ள பவுண்டி ட்ரூவின் கடல் பகுதியில் 100 புதிய உயிரினங்களை கடல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 21 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு பிப்ரவரியில் இதற்கான ஆராய்ச்சிப் பயணத்தை மேற்கொண்டது.
இந்தப் பயணத்தில் பல வினோதமான தோற்றம் கொண்ட நத்தைகள், மீன்கள், இறால்கள் தெரியவந்துள்ளன என பயணத்தின் தலைவரும் கடல் உயிரியலாளருமான அலெக்ஸ் ரோஜர்ஸை கூறுகிறார். இந்த மூன்று வார பயணத்தை தங்கரோவா கப்பலிலில் மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் 800 கிலோமீட்டர் நீளமுள்ள பவுண்டி ட்ரூவ் ஆழ்கடல் பகுதியை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர்.
நியூசிலாந்தில் உள்ள தேசிய நீர் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நியூசிலாந்தின் தே பாப்பா டோங்கரேவா அருங்காட்சியகம் ஆகியவையும் இந்தக் கடலாய்வுப் பயணத்தில் இணைந்துள்ளன.
"அதிக அளவிலான உயிரின மாதிரிகள் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். வெறும் நூறு என்று சொல்ல முடியாது. நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று நினைக்கிறேன்" என அலெக்ஸ் ரோஜர்ஸ் தெரிவிக்கிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட புதிய உயிரினங்களில் இதுவரை அடையாளம் காணப்படாத நட்சத்திர வடிவ வினோத விலங்கு ஒன்றும் உள்ளது. இந்தக் குழு குழு சுமார் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் இருந்து ஏறத்தாழ 1,800 மாதிரிகளை சேகரித்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
"நியூசிலாந்தின் கிழக்குக் கடற்கரையில் உள்ள இந்த ஆழ்கடல் பகுதியைப் பற்றிய விவரங்கள் குறைவாகவே உள்ளன" என்று டாக்டர் டேனியல் மூர் சொல்கிறார். புதிதாகக் கினைத்துள்ள நட்சத்திர வடிவ உயிரினத்தைப் பற்றிக் கூறும் டாக்டர் மூர், "இது இன்னும் ஒரு மர்மமாக உள்ளது. இதை விவரிக்க முடியாது. அது எங்கே இருக்கிறது என்று இதுவரை எங்களுக்குத் தெரியாது. தெரிந்தால் சுவாரஸ்யமாக இருக்கும்" என்கிறார்.
குயின்ஸ்லாந்து மியூசியம் நெட்வொர்க்கின் உயிரின வகைப்பாட்டியல் வல்லுநரான டாக்டர் மைக்கேலா மிட்செல், இந்த நட்சத்திர வடிவ உயிரினம் ஆக்டோகோரல் எனப்படும் ஆழ்கடல் பவளப்பாறையாக இருக்கலாம் என்று கருதுகிறார்.
இரண்டு மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் கடல்களில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடல் வாழ் உயிரினங்களில் வெறும் 10 சதவீதம் மட்டுமே ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற உயிரினங்களின் கண்டுபிடிப்பு கடல் ஆராய்ச்சியாளர்களுக்கு கடலுக்கடியில் இயங்கும் வாழ்க்கையை நன்கு புரிந்துகொள்ள உதவும்.