கென்யா நாட்டில் இயேசு கிறிஸ்துவை பார்ப்பதற்காக உண்ணாவிரதம் இருந்து 47 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் இயேசு கிறிஸ்துவை பார்ப்பதற்காக உண்ணாவிரதம் இருந்து பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உண்ணாவிரதம் இருந்தால் இயேசுவை பார்க்கலாம், நேரடியாக சொர்க்கத்திற்கு போகலாம் என்று கிறிஸ்தவ வழிபாட்டுத் தலைவரான மகென்சி என்தெங்கே என்பவர் தனது சீடர்களிடம் கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பி உண்ணாவிரதம் இருந்த பலர் உயிரிழந்துள்ளனர். அதன்படி நேற்று மாலிண்டி என்ற பகுதி அருகே 800 ஏக்கர் காட்டில் 26 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கடந்த வாரம் முதல் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அப்பகுதி சீல் வைக்கப்பட்டது. இதுவரை கண்டெடுக்கப்பட்ட மொத்த உடல்களின் எண்ணிக்கையை 47 ஆக உயர்ந்துள்ளது. சடலங்களை தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : Explained : கொச்சியில் தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவை நாளை தொடக்கம்.. முழுவிவரம் இதோ..
காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ இந்த சோதனையின் முடிவில், நாங்கள் இன்னும் அதிகமான உடல்களைப் பெற வாய்ப்புள்ளது..” என்று தெரிவித்தார். கென்யாவின் உள்துறை அமைச்சர் கிதுரே கிண்டிகி செய்தியாளர்களிடம் பேசிய போது, 800 ஏக்கர் கடலோர மாலிண்டியின் ஷகாஹோலா வனப்பகுதி குற்றம் நடந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் “ மக்களை மூளைச்சலவை செய்ததால் அவர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டு, பல அப்பாவி மக்களின் உயிரை பறித்த நபருக்கு மிக கடுமையான தண்டனை கிடைக்கும்..” என்று தெரிவித்தார்.
இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட பால் மகென்சி தானாகவே காவல்துறையில் சரணடைந்தார். அவர் அளித்த தகவல்களின் பேரில் மேலும் சிலரை போலீசாரால் காப்பாற்ற முடிந்தது. எனினும் அவர்களில் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 11 பேரில், 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் தேவாலயத்தின் தலைவர் மகென்சி என்தெங்கேவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். "இயேசுவை சந்திப்பதற்காக" பட்டினி கிடக்கும்படி சீடர்களிடம் கூறியதாக விசாரணையில் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் போலீஸ் காவலில் இருக்கும் போது மெக்கென்சி சாப்பிடவோ அல்லது குடிக்கவோ மறுத்துவிட்டார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையும் படிங்க : அசதியில் தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்!அதிவேகத்தில் வந்த ரயில்.. இறுதியில் நடந்த பயங்கரம்.!