Oct 19, 2023, 8:08 PM IST
இஸ்ரேல் பாலஸ்தீனம் போருக்கு இடையே அங்குள்ள நிலவரம் குறித்து ஏசியாநெட் நேரடி கள ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஏசியாநெட் சுவர்ணா செய்தி ஆசிரியர் அஜித் ஹனமக்கனவர், இஸ்ரேல் நாட்டுக்கு நேரடியாக சென்று போர்க்களத்தில் இருந்து பல்வேறு தகவல்களை சேகரித்து அளித்து வருகிறார்.
அந்த வகையில், காசா எல்லையில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள தெற்கு இஸ்ரேல் நகரமான கிரியாத் கட்டிற்கு அஜித் ஹனமக்கனவர் சென்று தகவல்களை சேகரித்துள்ளார். ஹமாஸ் ராக்கெட்டுகளால் அங்கு ஏற்பட்டிருக்கும் அழிவுகள் தெளிவாக தெரிவதாக அவர் தெரிவித்துள்ளார். அங்கு வாழும் மக்களிடம் பயம் மற்றும் கோபத்தின் உணர்ச்சிகள் தென்பட்டதாக கூறும் அஜீத் ஹனமக்கனவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேல் யூதர் ஒருவரிடம் கலந்துரையாடியுள்ளார்.
மும்பையின் பைகுல்லா பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி யூதரான அவர், “இந்த முறை ஹமாஸ் செய்தது மிகவும் தவறானது. முன்னெப்போதும் இதுபோன்று நடக்கவில்லை. அவர்கள் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தனர், பல பெண்களை சுட்டுக் கொன்றனர் மற்றும் சிறு குழந்தைகளின் தலையை துண்டித்தனர். நாங்கள் இருப்பதை ஹமாஸ் விரும்பவில்லை. யாசர் அராபத் இருந்தபோது, அமைதிக்கான உண்மையான முயற்சிகள் நடந்தன. ஆனால் இப்போது, ஹமாஸ் செய்து கொண்டிருப்பதை ஏற்க முடியாது. அவர்களுடன் நாம் இணைந்து இருக்க முடியாது.” என்றார்.
“ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளனர். 3000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பெண்களையும் குழந்தைகளையும் கடத்திச் சென்று பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர். இந்த நேரத்தில் இஸ்ரேல் அமைதியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சைரன் சத்தமும், ராக்கெட் ஏவுகணைகள் விழுவதும் இங்கு வசிப்பவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது என்கிறார் அஜீத் ஹனமக்கனவர். “நாங்கள் பல ராக்கெட் தாக்குதல்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஹமாஸ் ஏவிய ராக்கெட்டுகளின் எண்ணிக்கையால், அக்டோபர் 7ஆம் தேதி முதல் நாங்கள் தூங்கவில்லை. நாங்கள் சைரன் ஒலிப்பதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கிறோம். காரின் ஹார்ன் கூட எங்களை கவலையடையச் செய்கிறது.” என்று அங்கு வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதல் நடக்கும் போது இஸ்ரேல் அரசாங்கம் சைரன் ஒலிக்க செய்கிறது. இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்கள், பதுங்கு குழிகள் போன்றவற்றில் தஞ்சமடைகின்றனர்.
மேலும், “அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஊடுருவிய அனைத்து பயங்கரவாதிகளும் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று கூற முடியாது. அவர்கள் தலைமறைவாக இருக்கலாம். நாங்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறோம். பயங்கரவாதிகள் ஒரு கட்டத்திற்கு அப்பால் முன்னேறவில்லை. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் அதிர்ஷ்டவசமாக அவர்களை தடுக்க முடிந்தது.” என்றும் அவர் கூறியுள்ளார்.