Oct 28, 2023, 5:46 PM IST
பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக ஆட்சியை கண்டித்தும், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பப் பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்காததையும், மின்சார கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் வி ஏ டி கலிவரதன் தலைமையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஜேபி மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான நமிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு திமுக வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்றி விட்டது. அனைத்து பெண்களுக்கும் ரூபாய் 1000 தருவேன் என தேர்தல் வாக்குறுதி வழங்கிவிட்டு கார் இருக்கும் வீட்டிற்கு கிடையாது, பைக் வைத்திருந்தால் கிடையாது, கேஸ் வைத்திருந்தால் கிடையாது என கூறுகின்றனர். திமுக அரசு பெண்களுக்கு செய்த பச்சை துரோகம் இது. உங்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிவித்துவிட்டு அதற்கு பதில் ஆண்களுக்கு கட்டண உயர்வை அதிகரித்துள்ளது என குற்றம் சாட்டினார்.