ஐஸ்கிரீமிற்கு ஆசைப்பட்ட நாய்.. நான்கு பேர் மீது காரை ஏற்றிய பெண்..! சிசிடிவி வீடியோ

Aug 2, 2020, 11:09 PM IST

டெல்லி கைலாஷ் நகரை சேர்ந்த ரோகினி என்ற பெண், இரவு சுமார் 10 மணியளவில், தனது பி.எம்.டபுள்யூ காரில் வெளியே சென்றுள்ளார்.

அப்போது அங்கு சாலையோரம் நின்ற ஐஸ்கிரீம் வியாபாரி உட்பட நான்கு பேர் மீது அவரது கார் ஏறியுள்ளது.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பதறிப் போயுள்ளனர். உடனடியாக, படுகாயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த போலீசார், அதே பெண்ணின் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். சாலையோரம் ஐஸ்கிரீம் விற்றுக் கொண்டிருந்த நபரிடம் சென்று ஐஸ்கிரீம் வாங்கிவிட்டு, அதனை சாப்பிட்டுக் கொண்டே காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்துள்ளார்.

அந்த பெண்ணுடன் அவரது நாயும் காரில் இருந்துள்ளது. அந்த நாய், ரோகினியின் கையில் இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட முயன்றுள்ளது.

அப்போது அதனிடம் இருந்து, ஐஸ்கிரீமை திருப்பிய நிலையில், உடன் வண்டியின் ஆக்சிலேட்டரையும் அவர் மிதித்துள்ளார்.

இதனால் காரின் முன் பக்கமிருந்த ஐஸ்கிரீம் வண்டி மற்றும் அதன் அருகே நின்ற நான்கு பேர் மீது மோதியதாக அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.