
உலகின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் (YouTube) இன்று உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள பயனர்கள் யூடியூப் தளத்தை அணுகுவதில் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். பிப்ரவரி 18, 2026 அன்று காலை முதலே இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த வீடியோக்களைப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இணையதளங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் (Downdetector) தளத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் மட்டும் சுமார் 2,83,490 க்கும் மேற்பட்ட பயனர்கள் யூடியூப் சேவையில் சிக்கல் இருப்பதாகப் புகாரளித்துள்ளனர். சிகாகோ, நியூயார்க், வாஷிங்டன் போன்ற முக்கிய நகரங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் ஆயிரக்கணக்கான பயனர்கள் யூடியூப் வீடியோக்கள் லோட் ஆகவில்லை (Loading issues) எனத் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான பயனர்கள் யூடியூப் மொபைல் செயலியில் (App) சிக்கலைச் சந்தித்தாலும், இணையதளம் (Website) மற்றும் யூடியூப் டிவி (YouTube TV) சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சிலருக்கு முகப்புப் பக்கம் (Home Page) வெறுமையாகக் காட்சியளிக்கிறது, இன்னும் சிலருக்கு லாகின் செய்வதில் சிக்கல் உள்ளது. வீடியோ பிளேயர் வேலை செய்யாதது மற்றும் பக்கவாட்டு மெனு (Sidebar) மட்டுமே தெரிவது போன்ற பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளைப் பயனர்கள் சந்தித்து வருகின்றனர்.
பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, யூடியூப் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் விளக்கமளித்துள்ளது. "சில பயனர்களுக்கு யூடியூப் சேவையை அணுகுவதில் சிரமம் இருப்பதை நாங்கள் அறிவோம். எங்கள் தொழில்நுட்பக் குழுவினர் இதைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் நிலைமை சீராகும்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கோளாறுக்கான சரியான காரணம் என்னவென்று இன்னும் வெளியிடப்படவில்லை.
யூடியூப் முடங்கிய சிறிது நேரத்திலேயே, எக்ஸ் (முன்பு ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பயனர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினர். "யூடியூப் டவுன்" (#YouTubeDown) என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. சிலர் தங்களின் உணவு இடைவேளையின் போது வீடியோ பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டனர், இன்னும் சிலர் செயற்கை நுண்ணறிவு (AI) தான் இதற்குக் காரணம் என்று கிண்டலாக மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.