ஆண்ட்ராய்டு சாதனங்களில் இருந்து ஐ.ஒ.எஸ். சாதனங்களுக்கு சாட்களை இம்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது.
வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். தளத்தில் ஆண்ட்ராய்டு சாதனங்களில் இருந்து ஐபோனிற்கு நேரடியாக சாட்களை இம்போர்ட் செய்வதற்கான வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. தற்போது ஐபோன் பயனர்கள் தங்களின் சாட்களை ஏற்கனவே பயன்படுத்தி வரும் ஐபோன்களில் இருந்து இம்போர்ட் செய்யும் வசதி மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டில் இருந்து சாட் ஹிஸ்ட்ரியை இம்போர்ட் செய்யும் வசதி இதுவரை வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு சாம்சங் மற்றும் கூகுள் பிக்சல் போன்களில் இருந்து வாட்ஸ்அப் சாட்களை ஐபோனிற்கு இம்போர்ட் செய்யும் வசதியை வாட்ஸ்அப் வழங்கியது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 22.2.74 வெர்ஷனில் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து சாட்களை இம்போர்ட் செய்வதற்கான வசதி வழங்குவது பற்றிய குறியீடு இடம்பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பீட்டா டெஸ்டர்களுக்கும் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்து பீட்டா பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்க மேலும் சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வாட்ஸ்அப் 2.21.20.11 பீட்டா வெர்ஷன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிடப்பட்டது. இதில் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து ஐ.ஒ.எஸ்.-க்கு சாட் ஹிஸ்ட்ரியை இம்போர்ட் செய்வதற்கான வசதி வழங்குவது பற்றிய குறியீடு இடம்பெற்று இருந்தது.
இதே அம்சம் வழங்குவது பற்றிய குறியீடு கடந்த மாதம் வெளியான ஆண்ட்ராய்டு பீட்டா 2.21.19.1 வெர்ஷனிலும் இடம்பெற்று இருக்கிறது. சாட் ஹிஸ்ட்ரியை இம்போர்ட் செய்ய ஆண்ட்ராய்டு போன்களை புதிய ஐ.ஒ.எஸ். சாதனத்துடன் யு.எஸ்.பி. டைப் சி-டு-லைட்னிங் கேபிள் மூலம் இணைக்க வேண்டும். இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் 'மூவ் டு ஐ.ஒ.எஸ்.' செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாட்ஸ்அப், ஐ.ஒ.எஸ். தளத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சாம்சங் சாதனங்களுக்கு சாட் இம்போர்ட் செய்யும் வசதியை வழங்கியது. பின் இந்த வசதி கூகுள் பிக்சல் சாதனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சாதனங்களில் சாட் இம்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.