தகவல் தொடர்பு கிடைக்காமல் போன விக்ரம் லேண்டர் பற்றிய புதிய புகைப்படங்களை வெளியிட்டு நாசா சில தகவல்களை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’சந்திரனை ஆய்வு செய்யும் எங்களின் ஆர்பிட்டர் மூலம் இந்தியா அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம், நிலவில் தரையிறங்க இலக்கு நிர்ணயித்த இடம் புகைப்படம் எடுக்கப்பட்டது. ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்களில், லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை’’ என தெரிவித்துள்ளது.
அக்டோபரில் சந்திரனின் சுற்றுப் பாதையில் இருந்து மீண்டும் படமெடுக்க எங்கள் விண்கலம் முயற்சிக்கும், அப்போது வெளிச்சம் சாதகமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நிலவின் தென்துருத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ சமீபத்தில் அனுப்பியது. செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து நிலவை சுற்றி வரும் சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியதில், நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் விழுந்து சாய்ந்து கிடப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சிகள் செய்து வந்தனர் எனினும் பின்னடைவை சந்தித்தது. தொடர்ந்து, விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள வேண்டிய 14 நாள் ஆயுட்காலமும் கடந்த சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் கூறும்போது, ’’விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்ஞான் லேண்டர் ஆயுட்காலம் 14 நாட்கள். அந்த கெடு ஏற்கனவே கடந்து விட்டது. எனவே இனிமேல் அதனால் நமக்கு எந்த சிக்னலையும், தரமுடியாது’’ என்று தெரிவித்து இருந்தார்.