செயற்கை நுண்ணறிவு மிக்க ChatGPT தளத்தில் ஒருவர், ரெசிபி செய்வதற்கான டிப்ஸ்களை கேட்டுள்ளார். அதற்கு சாட் ஜிபிடி அளித்த பதிலளின்படி அவரும் ரெசிபி செய்துள்ளார், அது கடைசியாக எப்படி அமைந்தது என்பதை இங்கு காணலாம்
தொழில்நுட்ப உலகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமான பிரபல தளம் சாட் ஜிபிடி ஆகும். இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவுகளை உட்புகுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எந்த கேள்விகளை கேட்டாலும் கிட்டத்திட்ட துல்லியமான பதில்களை உடனுக்குடன் வழங்குகிறது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, மைக்ரோசாப்ட் நிறுவனமும் சாட் ஜிபிடி தளத்தோடு கைகோர்த்தது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் சுபம் ஜோஷி என்பவர் சாட் ஜிபிடி உதவியுடன் சமையல் ரெசிபி செய்த விதத்தை பதிவிட்டுள்ளார். அதில், தன்னிடம் உருளைக்கிழங்கு உள்ளிட்ட சில பொருட்கள் மட்டுமே உள்ளதாகவும், அதை வைத்துக் கொண்டு என்ன ரெசிபி செய்யலாம் என்று கேட்டுள்ளார். சுபம் ஜோஷியின் இந்த கேள்விக்கு நொடிப்பொழுதில் சாட் ஜிபிடி தளத்தில் இருந்து பதில் வந்தது.
Twitter Blue சந்தா இந்தியாவில் அறிமுகம்! இனி நீங்களும் ப்ளூ டிக் வாங்கலாம்!!
இது குறித்து அவரது வீடியோவில் கூறியிருப்பதாவது: "உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், மசாலா, ரொட்டி, சீஸ், உப்பு, மிளகு மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு நான் என்ன ரெசிபி செய்யலாம்?" என்று கேட்கிறார். சாட்பாட் உடனடியாக வழங்கிய பதிலில் "சீஸி உருளைக்கிழங்கு மற்றும் வெஜிடபிள் பேக்" அல்லது "உருளைக்கிழங்கு மற்றும் வெஜிடபிள் கிராடின்" என்ற ரெசிபி உணவை குறிப்பிட்டது. அதுமட்டுமின்றி, அந்த ரெசிபியை எப்படி தயாரிக்க வேண்டும் என்றும் படிப்படியாக விளக்கியது. வீடியோவின் முடிவில், அந்த மனிதர் சாட்போட்டின் வழிமுறைகளைப் பயன்படுத்தி அவர் செய்த ரெசிபியை சாப்பிட்டு பார்க்கிறார்.
இந்த வீடியோ ஜனவரி 21 அன்று பகிரப்பட்டது. ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து, இது 5 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது மற்றும் 259,000 பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். மேலும், பலர் சாட் ஜிபிடியின் இந்த ரெசிபி டிப்ஸ்க்கு பெரும் வரவேற்பும், பாராட்டுக்களையும் கமெண்ட் மூலம் தெரிவித்து வருகின்றனர். சாட் ஜிபிடி தளத்திற்குப் போட்டியாக தற்போது கூகுள் நிறுவனம் ‘பார்ட்’ என்ற பெயரிலான செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.