டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக CNG மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2022 டியாகோ மற்றும் டிகோர் மாடல்களை புதிய நிறங்கள் மற்றும் அம்சங்களுடன் அறிமுகம் செய்தது. எனினும், இந்த மாற்றங்கள் டாப் எண்ட் XZ+ வேரியண்ட்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. 2022 டியாகோ மற்றும் டிகோர் XZ+ வேரியண்ட்கள் டியாகோ மற்றும் டிகோர் CNG வேரியண்ட்களுடன் நாளை (ஜனவரி 19,2022) அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
தோற்றத்தில் 2022 டியாகோ மாடலில் புதிதாக மிட்நைட் பிளம் நிறம் கொண்டிருக்கிறது. இந்த நிறம் XZ+ வேரியண்டில் மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய டியாகோ மாடல் ஃபிளேம் ரெட், ஓபல் வைட், டேடோனா கிரே மற்றும் அரிசோனா புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை டியாகோ XZ+ மாடலில் LED டே-டைம் ரன்னிங் லைட்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், முன்புற குரோம், டோர் ஹேண்டில் மற்றும் டெயில்கேட்களில் குரோம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. உள்புறம் டூயல்-டோன் பிளாக் மற்றும் பெய்க் தீம் கொண்டிருக்கிறது. XZ+ தவிர மற்ற வேரியண்ட்களின் உள்புறத்தில் பிளாக் மற்றும் பெய்க் தீம் செய்யப்பட்டுள்ளது.
2022 டிகோர் மாடல் புதிதாக மேக்னெடிக் ரெட் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் புதிதாக இன்ஃபினிட்டி பிளாக் ரூஃப் கொண்ட டூயல் டோன் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இதுதவிர ஓபல் வைட், அரிசோனா புளூ, பியூர் சில்வர் மற்றும் டேடோனா நிறத்தில் கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ரெயின்-சென்சிங் வைப்பர்கள், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள் உள்ளன.
டாடா டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 86 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.