புதிய டொயோட்டா ஹிலக்ஸ் (Toyota Hilux) மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 30 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
டொயோட்டா நிறுவனம், ஹிலக்ஸ் (Toyota Hilux) என்கிற பிக்-அப் டிரக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் ஹிலக்ஸ் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. வெளியீட்டுக்கு முன்னரே இந்த மாடல் இந்தியாவில் காணப்பட்டது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. அவை ஹிலக்ஸ் மாடலின் விளம்பர படப்படிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என கூறப்படுகிறது. சமீபத்திய தகவல்படி ஹிலக்ஸ் பிக்-அப் டிரக் இந்தியாவில் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஹிலக்ஸ் மாடல் ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை மற்ற நாடுகளில், சுமார் 1.8 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் IMV-2 பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு உள்ளது. டொயோட்டாவின் பார்ச்சூனர் மற்றும் இன்னோவா கிரிஸ்டா போன்ற மாடல்களும் இதே பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய டொயோட்டா ஹிலக்ஸ் (Toyota Hilux) மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 30 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த மாடல் இங்கு அறிமுகமாகும் பட்சத்தில் இது, இசுசு வி-கிராஸ் மாடலுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.