வாஷிங்டன் கமாண்டர்ஸ் கால்பந்து அணியை வாங்குவதற்காக அமெரிக்க செய்தித்தாளான வாஷிங்டன் போஸ்ட்டை விற்க அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
அமெரிக்காவில் முன்னனி செய்தித்தாள் நிறுவனம் வாஷிங்டன் போஸ்ட் ஆகும். கடந்த 2013 ஆம் ஆண்டில் வாஷிங்டன் போஸ்ட்டை சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெஃப் பெசோஸ் விலைக்கு வாங்கினார். அதன்பிறகு, பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் நல்ல முறையில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், வாஷிங்டன் கமெண்டர்ஸ் கால்பந்து அணியை வாங்குவதற்கு ஜெஃப் பெசோஸ் ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. இதனால், தற்போது வாஷிங்டன் போஸ்ட் ஒரு வழக்குரைஞர் மூலம் சட்டப்படி விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
வாஷிங்டன் நிறுவனத்தின் உயர்மட்ட குழு வட்டாரத்தில் இது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அங்குள்ள பல ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, பெசோஸின் செய்தித் தொடர்பாளர் வாஷிங்டன் போஸ்ட் விற்பனைக்கு வரவில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளன.
இதற்கு முன்பு பெசோ தனக்கு கமெண்டர்ஸ் கால்பந்து அணியை பிடிக்கும், அதில் இன்னும் மாற்றங்கள் தேவைப்படுவதாக சில குறிப்பிட்ட தளங்களில் கூறியிருந்தார். கால்பந்து அணி ஏலத்தில் வெற்றி பெறவும், வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தில் குளறுபடி ஏற்படாதவாறு முழுமையான ஆய்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.
இதுதொடர்பான முழுமையான விவரங்கள் இன்னும் சில நாட்களில் உறுதியாக தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்க முடிவு செய்திருந்தார், ஆனால், அப்படி எதுவும் இல்லை என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பிறகு, எதிர்பார்த்தது போலவே எலான் மஸ்க் டுவிட்டர் தளத்தை வாங்கிவிட்டார்.