
கூகுள் நிறுவனம் கடந்த அக்டோபரில் பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. பிக்சல் 8 ஸ்மார்ட்போன்கள் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்ட OLED ஸ்கிரீன் பேனல்களைக் கொண்டுள்ளன. இந்நிலையில் சில பிக்சல் 8 மொபைலை வாங்கிய வாடிக்கையாளர்கள் திரையில் பல இடங்களில் வட்ட வடிவ குமிழ்கள் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
நல்ல வெளிச்சத்தில் பார்க்கும்போது 6.7-இன்ச் OLED ஸ்கிரீன் மீது சில இடங்களில் சின்னச் சின்னதாக குமிழ்கள் இருப்பது தெரிகிறது என்று வாடிக்கையாளர்கள் பலர் போட்டோ மற்றும் வீடியோவுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். டிஸ்பிளேயில் இருக்கும் சீரற்ற மேற்பரப்பு காரணமாக இந்த குமிழ்கள் தோன்றக்கூடும் என்று டெக் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பிக்சல் 8 மாடல்களின் திரையின் மீது குமிழ் உள்ள இடங்களில் அழுத்திப் பார்க்கும்போது இந்த ஸ்கிரீன் பிரச்சினை தெளிவாகத் தெரிகிறது.
இருப்பினும், இந்த குமிழ்கள் பிக்சல் 8 மொபைலின் டச் செயல்பாடுகளை பாதிக்கவில்லை. திரையில் படங்களை மறைக்கும் வகையிலும் இல்லை என்று பயனர்கள் தெரிவிக்கின்றனர். நல்ல வெளிச்சமான இடத்தில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வைத்துப் பார்க்காவிட்டால், இந்தக் குமிழ்கள் சரியாகத் தெரியவில்லை.
இந்தக் குமிழ்கள் காலப்போக்கில் மோசமடைந்து பின்னால் டிஸ்பிளேயில் பெரிய அளவில் சேதப்படுத்தலாம் என்று சில பயனர்கள் கவலைப்படுகிறார்கள்.
பிக்சஸ் 8 பயனர்கள் சமூக வலைத்தளங்களில் பல படங்களைப் பகிர்ந்துள்ளனர். இந்தப் படங்கள் ஸ்மார்ட்போனின் மேல் விளிம்பில் உருவாகும் குமிழ்களைக் காட்டுகின்றன. செல்ஃபி கேமராவின் அருகில் இடது மற்றும் வலது பக்கங்களில் இந்தக் குமிழ் பகுதிகளைக் காணமுடிகிறது.
சில பயனர்கள் ஏற்கனவே கூகுள் நிறுவனத்திடம் மாற்று மொபைல் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். மற்றவர்கள் இந்தச் மொபைலுக்காக வாரண்டியை நீட்டிக்க வேண்டும் என்று கேட்கின்றனர்.