கையால் தொடமுடியாத அளவு சூடேறும் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள்: கேஜெட் பிரியர்களுக்கு ஏமாற்றம்!

By SG BalanFirst Published Sep 28, 2023, 8:01 AM IST
Highlights

சில நேரங்களில் ஹீட்டிங் சிக்கல் சாப்ட்வேர் குறைபாட்டினாலும் ஏற்படக்கூடும் என்பதால் சிஸ்டம் அப்டேட் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஆப்பிள் நிறுவனம் முயற்சி செய்யக்கூடும்.

ஆப்பிள் நிறுவனத்தின் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட  ஐபோன் 15 சீரிஸ் மொபைல்களில் ப்ரோ மாடல்கள் இரண்டும் பயன்படுத்தும்போதும் சார்ஜ் செய்யும்போதும் அதிக சூடேறுவதாக பல வாடிக்கையாளர்கள் புகார் கூறுகின்றனர். இது ஐபோன் 15 மொபைல்களுக்கான வரவேற்பில் பின்னடைவு ஏற்படக் காரணமாகியுள்ளது.

ஆப்பிள் ஆன்லைன் மன்றங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கேம் விளையாடும்போது அல்லது ஃபோன் கால் அல்லது FaceTime வீடியோ சாட்டிங் செய்யும்போது ஐபோனின் பின்புறம் கையால் தொடமுடியாத அளவுக்கு சூடாகிவிடுவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். சில பயனர்களுக்கு, புதிய ஐபோனை சார்ஜ் செய்யும்போது இதே ஹீட்டிங் பிரச்சினை ஏற்படுகிறது என்கிறார்கள்.

ஆப்பிள் டெக்னிக்கல் சப்போர்ட் ஊழியர்களும் இந்த பிரச்சனை குறித்து ஆய்வு செய்துவருகின்றனர். புகார் கூறும் வாடிக்கையாளர்களிடம் ஐபோன் மிகவும் சூடாகவோ அல்லது குளிராகவோ ஆகும்போது அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பழைய உதவி கட்டுரைகளைப் படிக்க பரிந்துரைத்துள்ளனர். அதிகமாக பயன்படுத்தும்போது, சார்ஜ் செய்யும்போது அல்லது புதிய மொபைலை முதல் முறையாக பயன்படுத்தும்போது அதிக வெப்பம் ஏற்படக்கூடும் என்று சொல்கின்றனர்.

இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் பதிலளிக்கவில்லை. ஆப்பிள் நிறுவனம் மேக் லேப்டாப், ஆப்பிள் வாட்ச், ஐபாட் போன்ற பல கேஜெட்களை தயாரித்தாலும் ஐபோன்கள் தான் அந்த நிறுவனத்தின் வருவாயில் பாதியைக் கொடுக்கின்றன. இதனால், புதிய மாடல்களில் கண்டறியப்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்ய முடியுமா என்று நிறுவனம் ஆராயத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

சில நேரங்களில் இதுபோன்ற சிக்கல்கள் சாப்ட்வேர் குறைபாட்டினாலும் ஏற்படக்கூடும் என்பதால் சிஸ்டம் அப்டேட் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சி செய்யக்கூடும். பெரும்பாலும் அடுத்து வரும் அப்டேட்களில் இந்த ஹீட்டிங் பிரச்சினை தானாகவே சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால், பயனர்கள் புதிய ஐபோனைப் பெறும்போது, முந்தைய ஐபோனில் பயன்படுத்திய எல்லா அப்ளிகேஷன்களின் டேட்டாவையும் iCloud இலிருந்து டவுன்லோட் செய்யும்போது இந்த வெப்பமடையும் பிரச்சினை உண்டாகலாம். iCloud இலிருந்து தரவுகளை டவுன்லோட் செய்வது ஒரு நீண்ட செயல்முறை என்பதால் இதை நிறைவு செய்த பிறகு சூடாகும் பிரச்சினை தீரலாம்.

click me!