டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மேகாலயா போன்ற மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு ஊக்கத் தொகை வழங்குகின்றன.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கணிசமான அளவு வளர்ச்சியை பெற்று வருகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலக்கட்டம் காரணமாகவும், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் விலை உயர்வு காரணமாக பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்துகின்றனர்.
எலெக்ட்ரிக் வாகனங்களை வழக்கமான ஐ.சி.இ. வானங்களுடன் ஒப்பிடும் போது காற்று மாசு ஏற்படுத்தாது. மேலும் இவற்றை வாங்கி பயன்படுத்துவதற்கான செலவும் குறைவு ஆகும். இது தவிர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏராளமான சலுகைகளும் வழங்கப்படுகிறது.
மாநில அரசு சலுகைகள்:
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திர பிரதேசம், தமிழ் நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு அசத்தல் சலுகைகளை வழங்கி வருகின்றன. இவற்றில் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மேகாலயா போன்ற மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு ஊக்கத் தொகை வழங்குகின்றன.
தமிழ் நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்கள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளருக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர் சட்டப் பிரிவு 80EEB கீழ் வருமான வரி விலக்கை பெற்றுத் தருகிறது. மேலும் ஜி.எஸ்.டி. வரியிலும் சேமிப்பை பெற முடியும். சமீபத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 12 இல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
சட்டப் பிரிவு 80EEB பிரிவு கீழ் கிடைக்கும் பலன்கள்:
இந்தியாவின் வருமான வரி விதிகள் கார்களை தனிப்பட்ட பயன்பாடு மற்றும் ஆடம்பர பொருட்கள் பிரிவில் வகைப்படுத்தி இருக்கிறது. இதற்காக பொது மக்கள் தங்களின் வாகன தவணைகளில் எந்த விதமான வரிச் சலுகைகளையும் பெற முடியாது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் 80EEB பிரிவின் கீழ் வரிச் சலுகைகளை பெற முடியும்.
புதிய 80EEB பிரிவின் கீழ் மாத தவணையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர் ரூ. 1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளை பெற முடியும். இது எலெரக்ட்ரிக் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பொருந்தும்.
சலுகை பெறுவதற்கான வழிமுறைகள்:
80EEB சட்டப் பிரிவின் கீழ் சலுகைகளை பெற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
- ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனம் வாங்காதவர்கள் சட்டப் பிரிவு 80EEB கீழ் வரிச் சலுகை பெற முடியும்
- வரிச் சலுகை எலெக்ட்ரிக் வாகனங்களை மாத தவணையில் வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது.
- மாத தவணையில் வாங்குவோர் கடன் பெறும் நிறுவனம் NBFC-யின் கீழ் அல்லது பதிவு செய்யப்பட்ட வங்கிகளாக இருக்க வேண்டும்.
- வரிச் சலுகை தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் வியாபாரங்கள் பயன்பெற முடியாது.
- நிதியாண்டு 2020-2021 முதல் சட்டப் பிரிவு 80EEB பிரிவின் கீழ் வரிச் சலுகை பெற முடியும்.
- ஏப்ரல் 1, 2019 முதல் மார்ச் 31, 2023-க்குள் பெறப்படும் அனைத்து எலெக்ட்ரிக் வாகன கடன்களுக்கும் சட்டப் பிரிவு 80EEB கீழ் வரிச் சலுகை பெற முடியும்.