ஐபோன்களை தயாரிக்கும் டாடா குழுமம்: இறுதிகட்டத்தில் ரூ.4000 கோடி டீல்!

By Manikanda Prabu  |  First Published Jul 11, 2023, 1:33 PM IST

விஸ்ட்ரான் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை டாடா குழுமம் இறுதி செய்யவுள்ளது. இதன் மூலம் ஐபோன்களை தயாரிக்கும் முதல் இந்திய பிராண்டாக டாடா குழுமம் மாறவுள்ளது.
 


ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, நேரடி விற்பனை நிலையங்கள் மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஆப்பிள் ஐபேன்களை தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனத்துடனான ரூ.4000 கோடி ஒப்பந்தத்தை டாடா குழுமம் இறுதி செய்யவுள்ளது. இதன் மூலம், ஐபோன்களை தயாரிக்கும் முதல் இந்திய பிராண்டாக டாடா குழுமம் மாறவுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய சப்ளையராக விஸ்ட்ரான் நிறுவனம் உள்ளது. ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலை கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையை வாங்க டாடா குழுமம் முயற்சித்து வருகிறது. சுமார் ரூ.4000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

Latest Videos

undefined

இந்த நிலையில், டாடா குழுமம் - விஸ்ட்ரான் இடையேயான ஒப்பந்தமானது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, வருகிற ஆகஸ்ட் மாதம் இந்த ஒப்பந்தம் முடிவடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஒப்பந்தம் வெற்றியடைந்தால், ஒரு உள்ளூர் இந்திய நிறுவனம் ஐபோன் அசெம்பிளியில் நுழைவது இதுவே முதல் முறையாக இருக்கும். மேலும், இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்தால் பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள ஐபோன் 15-யை டாடா குழுமம் தயாரிக்கவும் அதிக வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தம் டாடா குழுமத்துக்கு முக்கிய மைல்கல்லாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

விஸ்ட்ரான் கர்நாடக தொழிற்சாலையில் தற்போது 10,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விஸ்ட்ரான் நிறுவனம், இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்க தொடங்கியது. iPhone SE, iPhone 12, iPhone 13, iPhone 14 ஆகிய போன்களை விஸ்ட்ரான் நிறுவனம் தற்போது இந்தியாவில் தயாரித்து வருகிறது. 

தம்ஸ்-அப் எமோஜி அனுப்பியவருக்கு ரூ.60 லட்சம் அபராதம்!

2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஐபோன்களை தயாரித்து அனுப்புவதாகவும், தொழிற்சாலையின் பணியாளர்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்த்தப்படும் எனவும் ஆப்பிள் நிறுவனத்துக்கு விஸ்ட்ரான் நிறுவனம் உறுதியளித்துள்ளது. எனவே, இந்த ஒப்பந்தம் முடிவடைந்தால் விஸ்ட்ரான் நிறுவனத்தின் வாக்குறுதிகளை டாடா குழுமம் நிறைவேற்றும் என கூறப்படுகிறது.

முன்னதாக, ஆப்பிள் விதிமுறைகளின் கீழ் லாபத்தை அடைவதில் உள்ள சவால்கள் காரணமாக விஸ்ட்ரான் தனது ஐபோன் அசெம்பிளி தொழிற்சாலையை இந்தியாவில் விற்க முடிவு செய்ததாக கூறப்பட்டது. இந்தியாவில் ஐபோன் அசெம்பிளி மட்டுமே செய்து வழங்குவதால் லாபம் ஈட்ட முடியாமல் போராடிய அந்நிறுவனம், வியட்நாம் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் உள்ள அதன் முக்கிய தகவல் தொழில்நுட்ப உற்பத்தி நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான் போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுடன் ஒப்பிடுகையில், சிறிய நிறுவனமான விஸ்ட்ரான், ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டது. ஐபோன்களை அசெம்பிள் செய்தாலும் கூட, சரக்கு நிர்வாகத்தில் பெரிய சப்ளையர்கள் ஒப்பிடும் போது விஸ்ட்ரான் நிறுவனம் சவால்களை எதிர்கொண்டது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தனது இந்திய தொழிற்சாலையை விற்க தைவான் நிறுவனமான விஸ்ட்ரான் முடிவு செய்தது.

இந்தியாவில் இருந்து விஸ்ட்ரான் கிட்டத்தட்ட வெளியேறி விட்டதால், அதன் இந்திய செயல்பாடுகளை கலைக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மற்றும் நிறுவனங்களின் பதிவாளர் ஆகியோரை அந்த நிறுவனம் அணுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, தனது மறுசீரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள அதன் ஐபோன் அசெம்பிளி தொழிற்சாலையை டாடா குழுமத்திடம் விஸ்ட்ரான் நிறுவனம் விற்கிறது. அந்த தொழிற்சாலையில் ஐபோன்களின் தற்போதைய உற்பத்தித் திறனை டாடா குழுமம் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!