டாடா நானோ எலெக்ட்ரிக் காரில் ரத்தன் டாடா தாஜ் ஓட்டலுக்குள் நுழையும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவுக்கு மிகவும் நெருக்கமான கார் மாடல்களில் ஒன்றாக டாடா நானோ எப்போதும் இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய மாடல் என்ற பெருமையை டாடா நானோ பெற்று இருக்கிறது. இந்தியாவில் கார் வாங்க வேண்டும் என்ற பலரின் ஆசையை, பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்தாமல் நிறைவேற்றிய பெருமை டாடா நானோ மாடலுக்கு உள்ளது.
சமீபத்தில் மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலுக்கு ரத்தன் டாடா நானோ எலெக்ட்ரிக் காரில் வந்துள்ளார். மேலும் இவரின் பாதுகாப்புக்கு யாரும் உடன்வரவில்லை. எளிமைக்கு பெயர் பெற்ற ரத்தன் டாடா பல சமயங்களில் அவரின் எளிய பழக்க வழக்கங்களால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். அந்த வகையில் தான் தனது உதவியாளர் ஒருவருடன் ரத்தன் டாடா, நானோ எலெக்ட்ரிக் காரில் தாஜ் ஓட்டலுக்கு வந்துள்ளார்.
பாதுகாப்புக்கு யாரும் உடன் வராத நிலையில், மிக எளிமையாக டாடா நானோ எலெக்ட்ரிக் காரில் ரத்தன் டாடா தாஜ் ஓட்டலுக்குள் நுழையும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ பார்க்கும் நெட்டிசன்கள் வழக்கம் போல ரத்தன் டாடா பாணியை பெரிதும் வரவேற்றதுடன், வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
நானோ எலெக்ட்ரிக்:
டாடா நானோ எலெக்ட்ரிக் கார் மாடல் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மாடல் ஆகும். இந்த கார் எலெக்ட்ரிக் வாகன பவர்டிரெயின் மூலம் எலெக்ட்ரா EV எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நானோ காரில் வழங்கப்பட்டு இருக்கும் 624சிசி, 2 சிலிண்டர்பெட்ரோல் என்ஜினுக்கு மாற்றாக 72 வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் சூப்பர் பாலிமர் லித்தியம் அயன் பேட்டரிகள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 160 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. மேலும் மணிக்கு 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை பத்து நொடிகளுக்குள் எட்டிவிடும். நானோ எலெக்ட்ரிக் மாடல் உற்பத்தி செய்யப்படாது என்ற தகவல் பலருக்கும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.