Suzuki Flying Cars : இந்தியாவில் துவங்கி மற்ற நாடுகளிலும் ஏர் டாக்சி சேவையை அறிமுகப்படுத்த சுசுகி மற்றும் ஸ்கை-டிரைவ் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
சுசுகி மற்றும் ஸ்கை-டிரைவ் நிறுவனங்கள் இணைந்து பறக்கும் கார் உருவாக்கும் ஆய்வு மற்றும் வளர்ச்சி பணிகளில் ஈடுபட இருப்பதாக அறிவித்து இருக்கின்றன. ஜப்பானை சேர்ந்த ஸ்கை-டிரைவ் நிறுவனம் 2018 ஆண்டு முதல் பறக்கும் கார் மற்றும் கார்கோ டிரோன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஸ்கை-டிரைவ் நிறுவனத்தின் கார்கோ டிரோன்கள் ஏற்கனவே பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது ஸ்கை-டிரைவ் நிறுவனம் இரண்டு பேர் சவுகரியமாக அமர்ந்து பயணம் செய்யும் வகையில் சிறிய ரக பறக்கும் கார் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த காரின் உற்பத்தி பணிகளை துவங்குவதற்கான ஆயத்த பணிகளை ஸ்கை-டிரைவ் ஆயத்தப்படுத்தி இருக்கிறது. 2025 வாக்கில் ஏர் டாக்சி சேவையை துவங்க ஸ்கை-டிரைவ் திட்டமிட்டு உள்ளது.
ஏர் டாக்சி சேவை:
ஜப்பானில் நடைபெற இருக்கும் 2025 world expo நிகழ்வில் இந்த சேவை துவங்கப்பட உள்ளது. இதை அடுத்து ஜப்பான் நாட்டிலேயே மேலும் சில பகுதிகளிலும் ஏர் டாக்சி சேவையை துவங்க ஸ்கை-டிரைவ் திட்டமிட்டு இருக்கிறது. வியாபாரம் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஸ்கை-டிரைவ் மற்றும் சுசுகி இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளன. இதோடு இந்தியாவில் துவங்கி மற்ற நாடுகளிலும் ஏர் டாக்சி சேவையை அறிமுகப்படுத்த இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.
இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான முதலீடு பற்றி ஸ்கை-டிரைவ் மற்றும் சுசுகி தரப்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இதே போன்று எப்போது இந்த பறக்கும் கார் உருவாக்கப்படும் என்பது பற்றியும் இரு நிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இந்த கூட்டணியை பயன்படுத்திக் கொண்டு சுசுகி நிறுவனம் பறக்கும் கார் சந்தையில் களமிறங்க முடிவு செய்துள்ளது.
சுசுகி பறக்கும் கார்:
இந்திய சந்தையில் சுசுகி பறக்கும் கார் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். சமீபத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை அறிமுகம் செய்ய ரூ. 10 ஆயிரத்து 440 கோடி முதலீடு செய்வதாக சுசுகி நிறுவனம் அறிவித்தது. இத்துடன் டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து முழுமையான எலெக்ட்ரிக் மிட்சைஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய சுசுகி இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த மாடல் 2025 வாக்கில் அறிமுகமாக இருக்கிறது. சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் முழுமையான எலெக்ட்ரிக் கார் சர்வதேச சந்தைகளுக்கும் ஏற்ற மாடலாக இருக்கும். இது ஆல்-எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருக்கிறது.