ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க அனைவரும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் எவை என தொடர்து பார்ப்போம்.
உலகில் இணைய சேவை தொடங்கப்பட்டது முதல் இன்று வரை தினந்தோரும் பல்லாயிரக்கணக்கானோர் சைபர் குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் சைபர் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்ட விதிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. எனினும், சைபர் குற்ற எண்ணிக்கையில் எந்த தொய்வும் ஏற்படவில்லை.
அரசு மற்றும் சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் சார்பில் இணைய பாதுகாப்பு பற்றி எவ்வளவு பாடம் எடுத்தாலும், மக்கள் ஏமாற்றப்படுவது தொடர் கதையாகி வருகிறது. உலகளவில் இன்று (பிப்ரவரி 7) சேஃபர் இண்டர்நெட் டே (பாதுகாப்பான இணைய நாள்) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் இணைய பாதுகாப்பில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
அப்டேட் மிக முக்கியம்
செக்யூரிட்டி மென்பொருள், இணைய பிரவுசர் மற்றும் இயங்குதளம் உள்ளிட்டவைகளின் புதிய வெர்ஷனை பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே இன்ஸ்டால் செய்திருப்பின் அவற்றை அடிக்கடி அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது வைரஸ், மால்வேர் மற்றும் இதர இணைய அச்சுறுத்தல்களில் சிக்காமல் இருக்க முடியும். அடிக்கடி அப்டேட் செய்ய, சாதனத்தில் உள்ள ஆட்டோமேடிக் அபடேட்ஸ் அம்சத்தை ஆன் செய்து வைக்க வேண்டும்.
கடுமையான கடவுச்சொல்
இணையம் சார்ந்து நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சேவைகளுக்கும் கடுமையான கடவுச்சொல் (பாஸ்வேர்டு) பயன்படுத்த வேண்டும். எளிதில் நினைவிருக்கும் கடவுச்சொல் பதிவிடும் போது அதனை ஹேக்கர்கள் நொடி பொழுதில் கண்டறிய முடியும். இதனால் குறைந்தபட்சம் எட்டு இலக்க கடவுச்சொல் பயன்படுத்த வேண்டும். அதில் அப்பர் மற்றும் லோயர் கிளாஸ் எழுத்துக்கள், எண்கள் மற்றும் குறியீடுகள் இடம்பெற வேண்டும்.
இணைய ஊழல்கள்
உங்களின் தனிப்பட்ட விவரங்களான பிரைவேட் அக்கவுண்ட் அல்லது லாக் இன் விவரங்களை சேகரிக்க ஹேக்கர்கள் போலி மின்னஞ்சல்கள் மற்றும் வலைதளங்கள் மூலம் தொடர்பு கொள்வர். இவ்வாறு செய்யும் போது பயனர்களை ஏமாற்ற அதிக சலுகைகள் நிறைந்த விளம்பரங்களை அவர்கள் வெளியிடுவர். இதனால் சந்தேகப்படும்படியான தகவல்கள் அடங்கிய மின்னஞ்சல்களில் வரும் அட்டாச்மெண்ட்களை கிளிக் செய்ய கூடாது.
ரகசியம் முக்கியம்
ஹேக்கர்கள் உங்களின் சமூக வலைதள ப்ரோஃபைல் பயன்படுத்தி உங்களின் கடவுச்சொல் விவரங்களை சேகரிக்க முயற்சிப்பர். இதனால் உங்களின் பிரைவசி செட்டிங்களை லஸாக் செய்து சமூக வலைதளங்களில் உங்களின் பிறந்த தேதி, முகவரி, பெற்றோர் விவரங்கள் உள்ளிட்டவைகளை பதிவிடாமல் இருக்க வேண்டும். உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து வரும் தொடர்புகளில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பாதுகாப்பான இணையம்
வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் இணைய நெட்வொர்க்கை கடுமையான கடவுச்சொல் கொண்டு பாதுகாக்க வேண்டும். பொது இடங்களில் வை-பை பயன்பசடுத்தும் போது நீங்கள் அனுப்பும் விவரங்கள் மீது அதிக கவனமாக இருக்க வேண்டும்.
பாதுகாப்பான ஷாப்பிங்
ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் முன் அந்த வலைதளம் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். செக்-அவுட் ஸ்கிரீனில் உள்ள இணைய முகவரி https என துவங்குகிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள். மேலும் வலைப்பக்கத்தில் சிறிய. பூட்டு சின்னம் தெரிகிறதா என்பதையும் பாருங்கள்.
பிரைவசி பாலிசி
நீண்ட நெடும் கட்டுரைகள் என்ற போதிலும், பிரைவசி பாலிசியில் குறிப்பிட்ட வலைதளம் சேகரிக்கும் தனிப்பட்ட விவரங்களை எவ்வாறு கையாள்கிறது என்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கும். ஒருவேளை குறிப்பிட்ட தளத்தில் உள்ள பிரைவசி பாலிசி உங்களுக்கு புரியவில்லை எனில், வேறு ஏதேனும் வலைதளத்தை பயன்படுத்துவது நல்லது.