பிறரிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக QR Codeஐ ஸ்கேன் செய்ய வேண்டாம் என்றும், அவ்வாறு செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் இழக்க நேரிடலாம் என்று பாரத ஸ்டேட் வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா என்ற வாசகத்தை பிரதமர் மோடியும், மத்திய பாஜக அரசும் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பணத்தை கையில் வைத்துக் கொள்ளாமல் வங்கி கணக்கில் செலுத்திவிட்டு டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி மொபைல் பேங்கிங், டிஜிட்டல் பேங்கிங், நெட் பேங்கிங், யுபிஐ போன்ற வசதிகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த வரிசையில் QR Codeஐ ஸ்கேன் செய்வதன் மூலமும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக சூப்பர் மார்கெட்டுகள், மளிகை கடைகளில் நாம் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை QR Code மூலம் செலுத்தி இருப்போம். ஆனால் இந்த QR Code தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வழங்கியுள்ளது.
வங்கி அனுப்பிய அறிவுறுத்தலின் படி “QR Code என்பது பணத்தை செலுத்துவதற்கு மட்டுமே ஸ்கேன் செய்யப்பட வேண்டும், மாறாக பணத்தை பெற்றுக் கொள்ள இந்த QR Codeஐ ஸ்கேன் செய்யவும் என்ற தகவல் செல்போன் மூலமாக பலருக்கும் அனுப்பப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்படும் QR Codeஐ ஸ்கேன் செய்வதால் எதிரில் உள்ளவர்கள் உங்கள் வங்கி தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டு உங்கள் பணத்தை கையாடல் செய்யலாம். எனவே QR Codeஐ பணத்தை செலுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்துங்கள். பணத்தை பெறுவதற்கு பயன்படுத்தக் கூடாது” என்று அறிவுறுத்தி உள்ளது.
Flipkart பிக் பில்லியன் டே மூலம் Poco M5 விற்பனை ஆரம்பம்!
மேலும் உங்கள் அக்கவுண்ட் பிளாக் செய்யப்படுவதை தவிர்க்க உங்கள் PAN நம்பரை அப்டேட் செய்யுமாறு SBI பெயரில் அனுப்பப்படும் போலி செய்தி குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே உங்களின் தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களை பகிருமாறு கேட்கும் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்திகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம் என்றும் SBI குறிப்பிட்டுள்ளது.