ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகளவு வாடிக்கையாளர்களை இழந்து இருப்பபதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுமார் ஒரு கோடியே 29 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பாரதி ஏர்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இந்த தகவல்கள் மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்த போதிலும், ரிலையன்ஸ் ஜியோ சந்தையில் அதிக பங்குகளுடன் முதலிடத்திலேயே நீடிக்கிறது. இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ 36 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து பாரதி ஏர்டெல் 30.81 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாரதி ஏர்டெல் சேவையில் சுமார் 4.5 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.
இரு நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனம் 23 சதவீத பங்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் மிக குறைந்த சந்தாதாரர்கள் சதவீதத்தை பொதுத் துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். பெற்றுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுமார் 100 கோடி பேர் ஆக்டிவ் சந்தாதாரர்களாக இருந்துள்ளனர் என டிராய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 116.75 கோடியில் இருந்து 115.46 கோடியாக குரைந்துள்ளது. நகர பகுதிகளில் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 63.84 கோடியில் இருந்து 63.33 கோடியாக குறைந்துள்ளது. ஊரக பகுதிகளில் இந்த எண்ணிக்கை 52.90 கோடியில் இருந்து 52.12 கோடியாக குறைந்து இருக்கிறது.
டிசம்பர் 31, 2021 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 36 சதவீத பங்குகளை பிடித்து இருக்கிறது. இதன் ஆக்டிவ் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 87.64 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ சலுகை கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை அடுத்து பலர் பி.எஸ்.என்.எல். சேவையில் இணைய துவங்கி இருக்கலாம்.