1991 செடான் மாடலில் பத்து லட்சம் கி.மீ.க்கள் - புது கார் பரிசளித்து அசத்திய வால்வோ!

By Kevin Kaarki  |  First Published Mar 19, 2022, 11:38 AM IST

1991 வால்வோ செடான் மாடலில் பத்து லட்சம் கிலோமீட்டர்களை கடந்த வாடிக்கையாளருக்கு அந்நிறுவனம் புதிய கார் பரிசளித்து இருக்கிறது.


ஆட்டோமொபைல் துறையில் மிகவும் நம்பத் தகுந்த பிராண்டுகளில் குறிப்பிட்ட சில நிறுவனங்களை எப்போதும் உறுதியாக கூற முடியும். அந்த வகையில், இந்திய சந்தையில் டொயோட்டா மிகவும் நம்பத் தகுந்த பிராண்டாக இருந்து வருகிறது. டொயோட்டா அறிமுகம் செய்த முதல் தலைமுறை இன்னோவா மற்றும் குவாலிஸ் எம்.பி.வி. போன்ற மாடல்கள் அதிக மெக்கானிக்கல் பிரச்சினைகள் இல்லாமல், இன்றும் சாலைகளில் கம்பீரமாக வலம் வந்து கொண்டு இருக்கின்றன.

கார் உற்பத்தியாளராக மிகவும் பாதுகாப்பான மாடல்களை உருவாக்குவதில் வால்வோ பெயர் பெற்று இருக்கிறது. நாங்களும் நம்பத் தகுந்த பிராண்டு தான் என வால்வோ இனி பெருமையாக கூறிக் கொள்ளலாம். பல்வேறு பிராண்டுகளை சேர்ந்த கார் மாடல்கள் பல லட்சம் கிலோமீட்டர்களை ஓடோமீட்டரில் கடந்து இருப்பதை நாம் பலமுறை கேள்விப்பட்டு இருப்போம். அந்த வரிசையில், வால்வோ பயன்படுத்தும் வாடிக்கையாளர் ஒருவர் தனது காரில் பத்து லட்சம் கிலோமீட்டர்களை கடந்துள்ளார்.

Latest Videos

undefined

இதுபற்றிய வீடியோ தனியார் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் காரை பயன்படுத்தி வரும் ஜிம் ஒ ஷீ தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். வால்வோ 740 GLE செடான் மாடலை ஜிம் 1991 ஆண்டு வாங்கி இருக்கிறார். அவரை சுற்றி பல விஷயங்கள் அடியோடு மாறி இருந்தாலும், இந்த வால்வோ கார் மட்டும் எவ்வித மாற்றமும் இல்லாமல் இன்றும் அவருடன் கம்பீரமாக நிற்கிறது.

ஆம்ரபத்தில் இந்த காரை வாங்கும் போது தனது தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், வால்வோ காரை கொடுத்துவிட்டு ஃபோர்டு காரை வாங்க முடிவு எடுத்து இருக்கிறார். எனினும், இறுதியில் தனது முடிவை மாற்றிக் கொண்டு வால்வோ காரிலேயே பத்து லட்சம் கிலோமீட்டர்களை கடந்து விடுவேன் என ஜிம் தனது தந்தையிடம் தெரிவித்ததாக வீடியோவில் விளக்குகிறார். 

சாமானியர்களுக்காக உருவாக்கப்பட்ட கார் இது. இதனை பராமரிப்பது மிகவும் எளிமையான காரியம் என ஜிம் தெரிவித்து இருக்கிறார். இந்த காரின் மின்விளக்குகளை மாற்றுவது மற்றும் இதர பணிகளை சாமானியர்களும் தாங்களாகவே எளிதில் செய்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். பத்து லட்சம் கிலோமீட்டர்களை ஒரே காரில் கடந்து இருப்பது பெரும் சாதனை ஆகும். 

இந்த காரின் என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷனை ஐந்து லட்சம் கிலோமீட்டர்களில் மாற்றியதாக ஜிம் தெரிவித்தார். இந்த கார் பயன்படுத்தும் போது ஒருமுறை கூட விபத்தில் தான் சிக்கயதே இல்லை என ஜிம் மேலும் தெரிவித்தார். ஆனால் தனது மனைவி இந்த காரை ஓட்டும் போது சிலமுறை இடித்து இருப்பதாகவும் ஜிம் தெரிவித்தார். இந்த காரின் தற்போதைய வெளிப்புறத்தில் ஆங்காங்கே துருப்பிடிக்க துவங்கி இருப்பது தெளிவாக காட்சியளிக்கிறது.

இது மிகவும் சக்திவாய்ந்த கார் இல்லை, ஆனாலும் இந்த வால்வோ கார் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதுவே தனக்கு போதுமான வேகம் தான் என ஜிம் தெரிவித்தார். ஜிம் இந்த காரை வாங்கும் போது மற்றும் ஓர் வாடிக்கையாளர் தனது வால்வோ காரில் பத்து லட்சம் கிலோமீட்டர்களை நிறைவு செய்து இருந்ததை பார்த்ததாக வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். 30 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கார் வாங்கிய அதே விற்பனை மையத்திற்கு தனது வால்வோ காரை ஜிம் எடுத்து சென்றார்.

அங்கு வால்வோ பிராண்டு மற்றும் விற்பனை மையம் சார்பில் 2022 வால்வோ S60 ஆடம்பர செடான் மாடல் ஜிம் ஒ ஷீக்கு பரிசாக வழங்கி இருக்கின்றன. இந்த கார் மட்டும் இன்றி, இரண்டு ஆண்டுகளுக்கு இதனை முற்றிலும் இலவசமாக பராமரித்துக் கொள்வதற்கான சந்தா உள்ளிட்டவையும் ஜிம் ஒ ஷீக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. வால்வோ கார்ஸ் வழங்கிய பரிசை பார்த்து ஜிம் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போனார். 

தனக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கும் புதிய வால்வோ S60 மாடலிலும் பத்து லட்சம் கிலோமீட்டர்களை கடக்க விரும்புவதாக ஜிம் வால்வோ கார் விற்பனை மையத்தின் பொது மேலாளரிடம் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவிலும் பலர் தங்களின் இன்னோவா மாடலில் பல லட்சம் கிலோமீட்டர்களை கடந்துள்ளனர். எனினும், இதுபோன்ற சன்மானம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு எந்த நிறுவனமும் இதுவரை வழங்கியதாக தெரியவில்லை. 

tags
click me!