
செயற்கை நுண்ணறிவு (AI) உலகில் போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கூகுளின் ஜெமினி (Gemini), ஆந்த்ரோபிக் (Anthropic) மற்றும் எலான் மஸ்கின் xAI ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனம் தனது புதிய ஆயுதமான GPT-5.2 மாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் நிறுவன ஊழியர்களுக்கு "கோட் ரெட்" (Code Red) எனப்படும் அவசர எச்சரிக்கையை விடுத்த சில நாட்களிலேயே இந்த புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது தொழில்நுட்ப உலகை உற்றுநோக்க வைத்துள்ளது.
இந்த புதிய GPT-5.2 மாடலானது, முந்தைய வடிவங்களை விட மிகச் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஓபன் ஏஐ நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. குறிப்பாக, எக்செல் ஷீட்களை (Spreadsheets) உருவாக்குவது, பிரசன்டேஷன்களைத் தயாரிப்பது, கணினி கோடிங் (Coding) எழுதுவது மற்றும் சிக்கலான பலகட்டத் திட்டங்களைக் கையாள்வது ஆகியவற்றில் இது கில்லாடியாக இருக்கும். மேலும், "44 வகையான வெவ்வேறு பணிகளில், அந்தந்தத் துறை சார்ந்த தொழில் வல்லுநர்களை விட இந்த AI சிறப்பாகச் செயல்படும்" என்று ஓபன் ஏஐ சவால் விட்டுள்ளது.
இந்தக் கூற்றை நிரூபிக்கும் வகையில் சில ஆதாரங்களையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது:
• கோடிங் திறன்: மென்பொருள் பொறியியலுக்கான 'SWE-Bench Pro' சோதனையில், GPT-5.2 மாடல் 55.6 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இது முந்தைய GPT-5.1 மாடலை விட 5 சதவீதம் அதிகமாகும்.
• சிந்தனைத் திறன்: மனிதர்களைப் போலப் பகுத்தறியும் திறனைச் சோதிக்கும் 'ARC-AGI-1' பெஞ்ச்மார்க்கில், இது பழைய மாடலை விட 10 சதவீதம் கூடுதல் புள்ளிகளைப் பெற்றுள்ளது.
• கேள்விகளுக்குத் தவறான பதிலளிப்பதைத் தவிர்க்கும் வகையில் இதன் 'Thinking' வேரியண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய பதிப்புகளை விட இது 30 சதவீதம் குறைவான பிழைகளையே செய்வதாகக் கூறப்படுகிறது.
ஓபன் ஏஐ நிறுவனம் என்னதான் உயர்ந்த வாக்குறுதிகளைக் கொடுத்தாலும், உண்மையான கள நிலவரம் சற்றே மாறுபட்டுள்ளது. 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியான GPT-5 மாடல் பயனர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. பல சமயங்களில் அது "முட்டாள்தனமான பதில்களை" (Dumb answers) தருவதாகப் புகார்கள் எழுந்தன.
தற்போதைய நிலவரப்படி, மக்கள் வாக்களித்துத் தீர்மானிக்கும் 'LMarena' தரவரிசையில், கூகுளின் ஜெமினி (Gemini) முதலிடத்தில் உள்ளது. ஆந்த்ரோபிக் மற்றும் எலான் மஸ்கின் xAI மாடல்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்க, ஓபன் ஏஐ-யின் GPT-5.1 மாடல் ஆறாவது இடத்தில்தான் உள்ளது. இழந்த தனது இடத்தைப் பிடிக்கவே ஓபன் ஏஐ இந்த 5.2 வெர்ஷனை அவசரமாக இறக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த புதிய GPT-5.2 மாடல் (Instant, Thinking மற்றும் Pro வேரியண்ட்களில்) கட்டணச் சந்தாதாரர்களுக்கு (Paid Users) மட்டுமே முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. பிளஸ், ப்ரோ மற்றும் பிசினஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் இதைப் பயன்படுத்தலாம். இது படிப்படியாகவே பயன்பாட்டிற்கு வரும் என்பதால், உடனே அப்டேட் வரவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். தற்போதுள்ள GPT-5.1 மாடல் இன்னும் மூன்று மாதங்களுக்குப் பயன்பாட்டில் இருக்கும் என்றும், அதன் பிறகு அது நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.