ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புது இ ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து இந்திய சந்தையில் களமிறங்கி இருக்கிறது. எனினும், மோட்டார்சைக்கிள் மட்டும் இன்றி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் எதிர்காலத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆறு முதல் எட்டு மாத காலமாக எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறைந்த விலை எலெக்ட்ரிக் கார்:
ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல் விலை ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் வியூகம் மற்றும் திட்டமிடல் பிரிவுக்கான தலைவர் ஸ்லோகர்த் டேஷ் தெரிவித்து இருக்கிறார். இந்த கார் இந்திய சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அசத்தலான தானியங்கி தொழில்நுட்பம்:
சமீபத்தில் ஓலா உற்பத்தி ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தானியங்கி தொழில்நுட்பமும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக மாடிபை செய்யப்பட்ட கொல்ஃப் கார்ட் பயன்படுத்தப்பட்டு, கார் அதிகபட்சமாக மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த வாகனத்தில் இரண்டு LiDAR கேமராக்கள், ஒரு வீடியோ கேமரா, GPS உள்ளிட்டவை பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் வழியில் வரும் மக்களுக்காக நின்றதோடு, வளைவுகளில் தானாகவே திரும்பி செல்கிறது. ஆரம்பகட்ட கான்செப்ட் என்ற முறையில் இந்த மாடல் கவர்ச்சிகரமான ஒன்றாகவே தெரிகிறது. எனினும், இதில் ஏராளமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
விளக்கம்:
முன்னதாக அதிகரித்து வரும் வாகன தீ விபத்துக்கள் தொடர்பாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை மற்றும் அறிவுரை வழங்கி இருந்தது. இதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் பதில் அளித்து இருக்கிறார்.
அதன்படி "எலெக்ட்ரிக் வாகனமோ, கசோலின் மூலம் இயங்கும் வாகனமோ என எந்த வாகனத்தை எடுத்துக் கொண்டாலும், அவற்றில் பிரச்சினை ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாத விஷயம் தான். பிரச்சினை எதுவும் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் பெரும்பாலான பிரச்சினைகள் மென்பொருள் சார்ந்தது என்பதால் எங்களால் அதனை மிகவும் சிறப்பாக சரி செய்திடுவோம்." என அவர் தெரிவித்தார்.