Honda Hawk 11 : ஹோண்டா நிறுவனம் ஹாக் 11 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
ஹோண்டா நிறுவனம் தனது ஹாக் 11 மோட்டார்சைக்கிள் மாடலுக்கான புதிய டீசரை வெளியிட்டு உள்ளது. இதில் புதிய மோட்டார்சைக்கிள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. நியோ-ரெட்ரோ தீமில் உருவாகி இருக்கும் ஹோண்டா ஹாக் 11 மார்ச் 19 முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் 2022 ஒசாகா மோட்டார்சைக்கிள் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஏற்கனவே இந்த மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடலுக்கான இரண்டாவது டீசர் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. முந்தைய டீசரில் புதிய ஹாக் 11 மாடல் கஃபே ரேசர் ஸ்டைலில் வளைந்த முன்புற ஃபேரிங், வட்ட வடிவ ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்தது. புதிய டீசரில் இதே அம்சங்கள் சற்று தெளிவாக காட்சியளிக்கின்றன.
புதிய ஹோண்டா ஹாக் 11 மாடல் 1100சிசி, டுவின் சிலிண்டர் பிளாட்ஃபார்ம் பயன்படுத்தும் நான்காவது மாடலாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த என்ஜின் முதன்முதலில் ஹோண்டா ஆஃப்ரிக்கா டுவின் மாடலில் வழங்கப்பட்டது. அதன்பின் CMX1100 ரிபெல் மற்றும் NT1100 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டது. இத்துடன் புதிய மாடலில் பிரத்யேக மிரர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹாக் 11 மாடலில் உள்ள அப்சைடு டவுன் ஃபோர்க் ஹோண்டா NT1100 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் புதிய மாடலில் நிசின் பிரேக்குகள் வழங்கப்படும் என தெரிகிறது. சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் தனது CB1100 மாடலின் விற்பனையை நிறுத்திய நிலையில், புதிதாக நியோ ரெட்ரோ ஸ்டைல் ஹாக் மாடலை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.