
ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram), வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது த்ரெட்ஸ் (Threads) செயலிகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியென்றால் இந்தச் செய்தி உங்களைச் சற்றே கவலைக்குள்ளாக்கலாம். மெட்டா நிறுவனம் தனது புதிய தனியுரிமைக் கொள்கையை (Privacy Policy) அமல்படுத்தியுள்ளது. இதன்படி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, அதற்கேற்ப தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களை (Personalised Ads) வழங்கத் திட்டமிட்டுள்ளது. இது பயனர்களின் தனியுரிமைக்கு விடப்பட்ட சவால் என்று விமர்சகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
மெட்டாவின் இந்தத் திட்டம் வெறும் சாதாரண மாற்றம் அல்ல; இது ஒரு பெரிய வணிக உத்தி. புதிய கொள்கையின்படி, நீங்கள் ஒரு பதிவை லைக் செய்வது, மெசேஜ் அனுப்புவது, தேடுவது அல்லது மெட்டாவின் AI உடன் உரையாடுவது என அனைத்தையும் இந்தச் செயற்கை நுண்ணறிவு உன்னிப்பாகக் கவனிக்கும். உங்கள் உரையாடல்களின் 'மெட்டாடேட்டா' (Metadata) - அதாவது நீங்கள் பேசும் தலைப்புகள், முக்கிய வார்த்தைகள் ஆகியவற்றை அல்காரிதம்களில் செலுத்தி, உங்கள் ரசனைக்கேற்ப விளம்பரங்களைத் திணிப்பதே இதன் நோக்கம். "நாங்கள் உங்கள் தனிப்பட்ட செய்திகளைப் படிப்பதில்லை" என்று மெட்டா கூறினாலும், தரவுகளைக் கையாளும் விதம் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இப்போது மெட்டா AI வசதியானது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய அனைத்திலும் ஊடுருவியுள்ளது. உதாரணமாக, நீங்கள் மெட்டா AI-விடம் "மலையேற்றம் (Hiking) செல்வது எப்படி?" என்று கேட்டால் அல்லது அதுபற்றி விவாதித்தால், அடுத்த சில நிமிடங்களில் உங்கள் ஃபீடில் டிரெக்கிங் பூட்ஸ், சுற்றுலாத் தலங்கள் குறித்த விளம்பரங்கள் வரிசைகட்டி நிற்கும். "தேவையற்ற விளம்பரங்களைத் தவிர்த்து, உங்களுக்குப் பிடித்ததை மட்டுமே காட்டுகிறோம்" என மெட்டா இதை நியாயப்படுத்தினாலும், இது பயனர்களின் அனுமதியின்றி நடக்கும் கண்காணிப்பு என்பதே பலரின் குற்றச்சாட்டு.
மெட்டாவின் இந்தச் செயலுக்கு எதிராக நுகர்வோர் அமைப்புகள், தனியுரிமைப் பாதுகாவலர்கள் என 36-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து, அமெரிக்காவின் பெடரல் வர்த்தக ஆணையத்தில் (FTC) புகார் அளித்துள்ளன. "பயனர்களின் உரையாடல்களை வைத்து விளம்பரம் செய்வது வரம்பு மீறிய செயல்" என்றும், இது சட்டரீதியாகவும் நெறிமுறைப்படியும் சரியானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
"நாங்கள் இதுகுறித்து அக்டோபர் 2025-லேயே பயனர்களுக்குத் தெரிவித்துவிட்டோம். AI மூலம் வரும் விளம்பரங்கள் பயனர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்; தரவுகள் பாதுகாப்பாக உள்ளன" என்று மெட்டா தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், இனி நீங்கள் மெட்டா செயலிகளைத் திறக்கும்போதெல்லாம், நீங்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதை AI தான் தீர்மானிக்கப் போகிறது. இது வசதியா அல்லது தனியுரிமை மீறலா என்ற கேள்விக்குறி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.