தானே நகரைச் சேர்ந்த ஒருவர் AnyDesk செயலியை இன்ஸ்டால் செய்து டிவி சரிபார்க்க முயன்ற போது, 5 லட்சம் ரூபாய் திருடு போன சம்பவம் அரங்கேறியுள்ளது.
தற்போதைய டிஜிட்டல் சூழலில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நீங்கள் எதைக் கிளிக் செய்கிறீர்கள், எதைப் பதிவிறக்குகிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு பாடம் அளிக்கும் வகையில், தானேவைச் சேர்ந்த ஒருவர் தனது டிவியை சரிசெய்ய முயன்றபோது 5 லட்சத்தை இழந்துள்ளார். அவர் தனது போனில் AnyDesk செயலியை பதிவிறக்கம் செய்த சில நொடிகளில் அவரது வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
AnyDesk செயலி என்பது வாடிக்கையாளர்களின் சாதனங்களைத் எங்கிருந்தும் இணைத்து தொழில்நுட்பச் சிக்கல்களை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், மோசடி செய்பவர் தனது திறமைகளைப் பயன்படுத்தி அந்த மும்பை நபரின் ஸ்மார்ட்போனில் நுழைந்து, அவரது வங்கிக் கணக்கு விவரங்களை மோசடிக்கு பயன்படுத்தியுள்ளார்.
இது குறித்து PTI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தானேவைச் சேர்ந்த ஒருவர் தனது டிவியில் சிக்கல்களை எதிர்கொண்டபோது, தனது டிவி சேனல் வழங்குநரை அழைக்க முயன்றார். அவர் அழைப்பில் பேசிக்கொண்டிருக்கும்போது, அவருக்கு வேறொரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது, அதில் பேசிய நபர், தன்னை தொழில்நுட்ப நிபுணர் என்று அறிமுகம் செய்துகொண்டார்.
டுவிட்டரா? இன்ஸ்டாகிராமா? வாக்கெடுப்பு நடத்திய எலான் மஸ்க்! அதிர்ச்சி முடிவுகள்!!
டிவியை சரிசெய்வதற்கு AnyDesk செயலியை பதிவிறக்கும்படி சொன்னார். இவரும், அதை நம்பி தனது போனில் AnyDesk செயலியை பதிவிறக்கம் செய்தார். அவ்வளவு தான், அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 5 லட்சம் காணாமல் போனது. இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்து, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 (ஏமாற்றுதல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.
ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான முதல், முக்கிய விஷயம் உங்கள் வங்கி உள்நுழைவு விவரங்கள் அல்லது கடவுச்சொற்களை யாருடனும் பகிரக்கூடாது. உங்களுக்குத் தெரியாத ஒருவர், உங்கள் சாதனங்களில் ஏதேனும் ஒன்றை அணுகும்படி கேட்டு, குறிப்பிட்ட மென்பொருளைப் பதிவிறக்க சொன்னால், கவனமாக இருக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமான எந்தவொரு அழைப்பையும் எடுத்து, எதிர்முனையில் சொல்பவரின் வழிமுறையின்படி நடக்கக்கூடாது.