மஹிந்திரா தனது எலெக்ட்ரிக் வாகன மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டு வருகிறது.
மஹிந்திரா நிறுவனம் “Born Electric” பெயரில் கான்செப்ட் எஸ்.யு.வி. மாடல்களின் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை சமீப காலங்களில் வெளியிட்டு வருகிறது. தனது வாகன மாடல்களை படிப்படியாக எலெக்ட்ரிக் மயமாக்கும் முயற்சியில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் கால்பதிக்க முடிவு செய்து உள்ளது.
எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கிய முதல் இந்திய வாகன உற்பத்தியாளராக மஹிந்திரா இருக்கிறது. மஹிந்திரா நிறுவனம் ரெவா எனும் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளர் மூலம் சில மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. எனினும், இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தை அதன் இளமை யுகத்தில் இருப்பதால், மஹிந்திரா பெரும் இழப்புகளை சந்தித்தது.
எலெக்ட்ரிக் வாகன திட்டம்:
இதைத் தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன திட்டங்களை முழுமையாக மாற்றி அமைத்து இருக்கிறது. மஹிந்திரா நிறுவனம் இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரினா எனும் டிசைனிங் நிறுவனத்தை கைப் பற்றியது. இந்த நிறுவனம் உலகின் அதிவேக எலெக்ட்ரிக் வாகனமான படிஸ்டாவை வெற்றிகரமாக உருவாக்கி அசத்தி இருக்கிறது.
பினின்ஃபரினா பட்டிஸ்டா மாடல் 1900 ஹெச்.பி. திறன் வெளிப்படும் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் மாடல் ஆகும். இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை இரண்டே நொடிகளில் எட்டிவிடும். தலைசிறந்த நிறுவனம் ஒன்றை கையில் வைத்து இருக்கும் மஹிந்திரா தனது எலெக்ட்ரிக் வாகன மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான திட்டமிடலை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஏழு புது எலெக்ட்ரிக் கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
அசத்தல் டீசர் வெளியீடு:
பிரதாப் போஸ், மஹிந்திரா நிறுவனத்தின் மூத்த டிசைன் அலுவலர் தனது சமூக வலைதள பக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் டீசரை வெளிிய்ட்டு உள்ளார். மஹிந்திரா அட்வான்ஸ்டு டிசைன் ஸ்டூடியோவில் டிசைன் செய்யப்பட்ட இந்த மாடல் சர்வதேச சந்தைக்கான எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என தெரிகிறது.
டீசரின் படி புதிய எஸ்.யு.வி. மாடலில் மஹிந்திரா ஃபார்முலா இ பந்தயத்தில் கற்ற அனுபவங்களை புகுத்த இருப்பது தெரிய வந்து இருக்கிறது. முந்தைய டீசர்களில் இந்த காரின் உள்புறம் ஃபைட்டர் ஜெட் காக்பிட் போன்ற இண்டீரியர், பெரிய ஸ்கிரீன்கள் மற்றும் அதிநவீன ஸ்டீரிங் வீல் வழங்கப்பட இருப்பது தெரியவந்தது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் ஆகஸ்ட் 15 ஆம் தேதி லண்டனில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது மட்டும் இன்றி மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.