ஜியோ நிறுவனம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் Jio True 5G சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 5ஜி சேவைகள் மும்முரமாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஏர்டெல், ஜியோ இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் களத்தில் இறங்கியுள்ளன. ஏர்டெலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் 5ஜி நெட்வொர்க்கில் இணைந்துள்ளனர். ஜியோவைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே முதற்கட்டமாக 5ஜி சேவையை வழங்கி வந்ததது.
இந்த நிலையில், தற்போது பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் 5ஜி சேவையை அமல்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஜியோவிடம் இருந்து இந்த அப்டேட் வந்துள்ளது. முன்னதாக முன்பு மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரணாசி ஆகிய நகரங்களில் 5ஜி கொண்டு வரப்பட்டது. பின்னர், ஜியோ தனது 5ஜி சேவைகளை ராஜஸ்தானில் உள்ள நாத்துவாராவில் அறிமுகப்படுத்தியது. தற்போது, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் 5ஜி சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பெங்களூரு, ஹைதராபாத்தில் இருக்கும் ஜியோ பயனர்கள் வரவேற்பு முறையில் 5ஜி சேவையை அனுபவிக்கலாம். அதாவது ஜியோ வெல்கம் ஆஃபர் என்று குறிப்பிட்ட பயனர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 5ஜி சேவை வழங்கப்படும்.
TRAI அறிக்கை எதிரொலி: Jio 4G ரீசார்ஜ் பிளான்களில் விரைவில் கட்டண உயர்வு?
ஜியோவில் 239 ரூபாய் திட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட பிளானில் சந்தாதாரராக இருந்தாலே போதும். ஜியோ 5ஜி சேவையை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. 239 ரூபாய்க்கு குறைவான பிளானில் இருப்பவர்களுக்கு 5ஜி சேவைக்கான அழைப்பு கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி சேவையைப் பெறுவதற்கு தனியாக 5ஜி சிம் வாங்க தேவையில்லை. 4ஜி சிம் கார்டே 5ஜி ஆக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் ஜியோ 5ஜி வேலை செய்யும் என்பது குறித்த விவரங்கள் ஜியோவின் இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் முன்னினி ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் 5ஜி சேவைக்கான அப்டேட் கொண்டு வரப்படும் என்று ஏர்டெல், ஜியோ இரு நிறுவனங்கள் கூறியுள்ளன.