ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE 3 மற்றும் ஐபேட் ஏர் 5 மாடல்களின் உற்பத்தி பற்றிய புது அப்டேட் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முக்கிய நிகழ்வுகளை நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. முதல் நிகழ்வு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலும், அடுத்த நிகழ்வு ஜூன் மாதமும், பின் செப்டம்பரில் ஐபோன் வெளியீட்டு நிகழ்வு என நடத்தப்பட்டு வருகிறது. ஃபிளாக்ஷிப் சாதனங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகாது என்பதால் மார்ச் மாத நிகழ்வு மட்டும், செப்டம்பர் நிகழ்வுக்கு இணையான வரவேற்பை எப்போதும் பெறாது.
மார்ச் மாத நிகழ்வில் ஆப்பிள் தனது குறைந்த விலை சாதனங்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. பெரும்பாலும் அக்சஸரீக்கள், அல்லது ஐபோன் SE மாடல்கள் இந்த நிகழ்வில் அறிவிக்கப்பட்டு வருகிறது. 2022 ஆண்டில் ஆப்பிள் தனது ஐபோன் SE 3 மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது மட்டுமின்றி ஐபேட் ஏர் 5 மாடலும் இந்த நிகழ்வில் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆசிய சந்தைகளில் தொழில்நுட்ப உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ள ஜப்பான் நாட்டை சேர்ந்த தளம் ஒன்று ஐபோன் SE 3 மற்றும் ஐபேட் ஏர் 5 மாடல்களுக்கான உற்பத்தி ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருவதாக தெரிவித்து இருக்கிறது. இரு மாடல்களின் டிசைன் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால், உற்பத்தி துவங்கி இருக்கிறது.
புதிய ஐபோன் SE 3 மாடலில் முந்தைய வெர்ஷன்களை போன்றே அளவில் சிறியதாகவும், கிளாஸ் மற்றும் அலுமினியம் சேசிஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் மேக்சேஃப் சார்ஜருக்கான வசதி வழங்கப்படவில்லை. மாறாக Qi வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய ஐபோன் SE 3 மாடலின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.