இந்தியாவிலேயே மிக குறைந்த கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் டெல்லியில் கட்டமைக்கப்படுகின்றன.
இந்தியாவின் தலைநகர் என்ற பெருமையுடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தலைநகராகவும் டெல்லி பார்க்கப்படுகிறது. அம்மாநில அரசு இதே நிலையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த வரிசையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், அதற்கான கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்யவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. டெல்லி மாநிலத்திற்கான மின்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஜூன் 27 ஆம் தேதிக்குள் அம்மாநிலத்தில் 100 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் கட்டமைக்கப்பட இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
புதிய எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களில் சார்ஜிங் செய்வதற்கான கட்டணம் யூனிட்டிற்கு ரூ. 2 கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. இது நாட்டிலேயே மிக குறைந்த கட்டணம் ஆகும். எலெக்ட்ரிக் வாகன துறையில் டெல்லி தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. இங்குள்ள ஆளும் கட்சியான ஆம் ஆத்மி எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை முடிந்த வரை வேகமாக அதிகப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகளின் மூலம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பயன்பாடு அதிகரிப்பதோடு, மாநிலம் முழுக்க எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் சார்ஜிங் செய்வதற்கான கட்டணம் குறைவாக நிர்ணயம் செய்தால், எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை மேலும் அதிகப்படுத்த முடியும்.
"டெல்லி அரசு ஜூன் 27, 2022-க்குள் 100 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் சார்ஜிங் மையங்களில் வாகனங்களை சார்ஜ் செய்ய யூனிட்டிற்கு ரூ. 2 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இது நாட்டிலேயே மிகவும் குறைவானது ஆகும்." என சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார். முன்னதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் டெல்லியில் சுமார் 900 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் உருவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
2025 ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் 25 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்க வேண்டும் என ஆகஸ்ட் 2020 வாக்கில் டெல்லி அரசு திட்டமிட்டது. மேலும் நாட்டிலேயே முதல் மாநிலமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களை முழுமையாக ரத்து செய்து டெல்லி அசத்தியது.
அதிக எண்ணிக்கை, குறைந்த விலை மற்றும் சீரான இடைவெளியில் சார்ஜிங் வசதிகளை அமைப்பதன் மூலம் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை கணிசமாக உயர்த்த முடியும். எலெக்ட்ரிக் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க இதுவரை 12 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இவை குறைந்த பட்சம் யூனிட்டிற்கு ரூ. 3.60 கட்டணமாக நிர்ணயித்துள்ளன. இந்த கட்டணங்களுக்கு மாணியம் வழங்கப்பட இருக்கின்றன.
"முதற்கட்டமாக 100 பிரைம் லொகேஷன்களில் சார்ஜிங் மையங்களை அமைப்பதற்கான டெண்டர் வழிமுறைகள் ஏற்கனவே நிறைவு செய்து விட்டன. இங்கு சார்ஜிங் மையங்களை கட்டமைக்கும் பணிகள் துவங்க இருக்கின்றன. இவற்றில் 71 சார்ஜிங் மையங்கள் மெட்ரோ ஸ்டேஷன்களில் அமைக்கப்பட இருக்கின்றன," என்று சத்யேந்தர் ஜெயின் மேலும் தெரிவித்தார். டெல்லி மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன கூட்டணியின் கீழ் உருவாக்கப்படுகிறது.