இந்தியாவில் AI தொழில்நுட்பத்தின் சந்தை மதிப்பு 2025ஆம் ஆண்டில் 7.8 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று என விவேக் ஆபிரகாம் சுட்டிக்காட்டுகிறார்.
இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் பங்கு குறித்த ஆய்வுகளைச் செய்துவரும் கார்னகி இந்தியா நிறுவனம் ஆண்டுதோறும் உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு எட்டாவது உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாடு டிசம்பர் 4 முதல் 6 வரை மூன்று நாள் நடைபெற உள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி பிரிவுடன் இணைந்து இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த உச்சிமாநாடு செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், தேசிய பாதுகாப்பு மற்றும் பல துறைகளில் கவனம் செலுத்துகிறது.
undefined
'தொழில்நுட்பத்தின் புவிசார் அரசியல்' என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருப்பொருளை முன்வைத்து கார்னகி இந்தியா தொடர் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இந்தத் தொடரில் அமெரிக்காவைச் சேர்ந்த சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce) நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான மூத்த இயக்குநர் விவேக் ஆபிரகாம் 'இந்தியாவின் AI பயணம்: நெறிமுறைகள், வாய்ப்புகள் மற்றும் அதற்கு அப்பால்' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இதில் உலகளாவிய தொழில்நுட்ப மாநாட்டின் முக்கியத்துவம் மற்றும் பேசுபொருட்கள் பற்றி விவரித்துள்ளார்.
அதில், "ஒரு அமெச்சூர் டெக்னாலஜிஸ்ட் என்ற முறையில், மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி என்னை ஈர்க்கிறது. 2022ஆம் ஆண்டில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். 2023ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் தங்கள் AI தொழில்நுட்ப உத்திகளை விரைவாக செயல்படுத்தி வருகின்றன. அரசாங்கங்கள் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பட சாத்தியமான அபாயங்கள் மற்றும் புதிய வாய்ப்புகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன" என்கிறார்.
மொபைலில் உள்ள AI தொழில்நுட்ப வசதிகளே வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியுள்ளது என்று கூறியிருக்கும் அவர், "AI தொழில்நுட்பத்தின் போக்கு எந்த திசையில் சென்றாலும், ஒன்று தெளிவாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இன்னும் 'எதிர்காலத்தின் தொழில்நுட்பம்' என்ற நிலையில் இல்லை. இப்போதே, நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அது ஊடுருவியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
"செய்திகளைச் சரிபார்ப்பதற்கும், சமூக ஊடகங்களிலும், மரபணு மற்றும் மருந்து ஆராய்ச்சி, ஈ-காமர்ஸ், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நிதி மற்றும் கடன் வழங்கல் அமைப்புகளில் தானியங்கி அம்சத்தைப் புகுத்த இந்தத் தொழில்நுட்பம் பயன்படுகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
"இந்தியா உலகளாவிய தொழில்நுட்பத் தலைமையை ஏற்று, AI பொருளாதாரத்தை முன்னின்று வழிநடத்தத் தயாராக உள்ளது. இந்தியாவில் AI தொழில்நுட்பத்தின் சந்தை மதிப்பு 2025ஆம் ஆண்டில் 7.8 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்தியா பிராண்ட் ஈக்விட்டி அறக்கட்டளை தெரிவித்துள்ளது" எனவும் விவேக் ஆபிரகாம் சுட்டிக்காட்டி இருக்கிறார்.