எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய முதற்கட்டமாக ரூ. 600 கோடி முதலீடு செய்யப்பட இருக்கிறது.
உலகில் நீண்ட காலம் ப்ரோடக்ஷனில் இருந்த கார் இந்துஸ்தான் அம்பாசடர். 1956 ஆண்டு துவங்கி 2014 வரை அம்பாசடார் மாடல் சந்தையில் இருந்தது. அதன் பின் பிறப்பிக்கப்பட்ட மிக கடுமையான புகை விதிகளை அடுத்து அம்பாசடர் மாடல் இந்த சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்துஸ்தான் மோட்டார்ஸ் சந்தையில் மீண்டும் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
ஐரோப்பிய நிறுவனத்துடன் ஒப்பந்தம்:
அடுத்த ஆண்டு வாக்கில் இரு நிறுவனங்கள் இடையே இது குறித்து அதிகாகரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. கொல்கத்தாவை அடுத்த உத்தர்பாராவில் உள்ள இந்துஸ்தான் மோட்டார்ஸ் உற்பத்தி ஆலையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய முதற்கட்டமாக ரூ. 600 கோடி முதலீடு செய்யப்பட இருக்கிறது.
இது பற்றிய முழு தகவல்கள் அடுத்த ஆண்டு அறிவிக்கப்பட உள்ளது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் அதிக இடவசதி கொண்டுள்ளது. மேலும் ஆலையை ரிமாடல் செய்து வாகனங்கள் உற்பத்தியை இங்கேயே துவங்க இருக்கிறது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் மட்டும் இன்றி ஐரோப்பிய நிறுவனமும் தன்பங்கிற்கு முதலீடு செய்ய இருக்கிறது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:
இந்துஸ்தான் மோட்டார்ஸ் தனது விநியோகஸ்தர்கள் காண்டாக்ட்-ஐ பயன்படுத்தி புது பிராண்டை மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டு உள்ளது. அம்பாசடர் பிராண்டை சிட்ரோயன் நிறுவனம் வைத்து இருக்கிறது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கும் நிலையில், இது நிச்சயம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் இ பைக் மாடல்களை விட இ ஸ்கூட்டர்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக இந்துஸ்தான் மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் என்றே தெரிகிறது. எனினும், இதுபற்றி இரு நிறுவனங்கள் தரப்பில் இதுவரை இறுதியான முடிவு எட்டப்படவில்லை. இது பற்றிய தகவல்கள் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படலாம்.