அன்று சொன்ன வார்த்தை - ஏர்டெல் நிறுவனத்தில் ரூ. 7500  கோடி முதலீடு செய்யும் கூகுள் - எதற்கு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Jan 29, 2022, 10:42 AM IST

கூகுள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஏர்டெல்லில் ரூ. 7500 கோடி முதலீடு செய்கிறது.


கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் ரூ. 7,510 கோடி முதலீடு செய்வதாக அறிவித்து இருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகளுக்கு பக்கபலமாக விளங்கும் நோக்கில் முதலீடு செய்யப்படுவதாக இரு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

முதலீடு திட்டத்தின் படி ஏர்டெல்  நிறுவன பங்குகளில் ரூ. 5.255 கோடிகளை, வர்த்தக ஒப்பந்தங்களிலும், ஏர்டெல் சேவைகளை மேம்படுத்துவதற்கான முதலீடு உள்ளிட்டவைகளில் ரூ. 2,250 கோடிகளை கூகுள் முதலீடு செய்ய இருக்கிறது. முதலீடு மூலம் கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் 1.20 சதவீத பங்குகளை வாங்க இருக்கிறது. இதில் ஒரு பங்கின் விலை ரூ. 734 ஆகும். 

Tap to resize

Latest Videos

இரு நிறுவனங்கள் உடனான ஒப்பந்தத்தின் படி கூகுள் நிறுவனம் பல கட்டங்களாக ரூ. 5,255 கோடியை வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் வழங்க இருக்கிறது. முன்னதாக இதே போன்ற ஒப்பந்தம் கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் இடையே கையெழுத்தானது. அதன்படி ஜியோ குழுமத்தில் கூகுள் நிறுவனம் ரூ. 33, 775 கோடியை முதலீடு செய்தது. இதுபற்றிய அறிவிப்பு ஜூலை 2020 வாக்கில் வெளியானது.

தற்போது கூகுள் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முதலீட்டு கூட்டணி மூலம் இந்தியாவில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வது, 5ஜி சேவையை வழங்குவது மற்றும் டெலிகாம் சந்தையில் போட்டியை ஏற்படுத்தும் வகையிலான சேவைகளை வழங்குவது, இந்தியாவில் கிளவுட் சார்ந்த சேவைகளை மேம்படுத்துவது என பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

பங்குகளை விற்கும் நடவடிக்கை ஒழுங்குமுறை மற்றும் பங்குதாரர்கள் அனுமதி அளித்த பின்னரே செல்லுபடியாகும். முன்னதாக ஏர்டெல் நிறுவனம் தனது பங்குகளை விற்று ரூ. 21 ஆயிரம் கோடியை ஈட்டியது. தற்போது ஏர்டெல் மற்றும் கூகுள் நிறுவனங்கள் அறிவிப்பை தொடர்ந்து ஏர்டெல் நிறுவன பங்குகளின் விலை 0.54 சதவீதம் வரை அதிகரித்தது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் டிஜிட்டைசேஷன் நிதியாக ரூ. 75,060 கோடிகளை முதலீடு செய்ய இருப்பதாக கூகுள் அறிவித்தது. இதன் மூலம் ஐந்து முதல் ஏழு ஆண்டு காலக்கட்டத்தில் இந்த நிதி படிப்படியாக முதலீடு செய்யப்படும் என தெரிவித்து இருந்தது. அதன்படி தற்போது ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் முதலீடு செய்து இருக்கிறது. 

click me!