பிக்சல் நோட்பேட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் நோட்பேட் என அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் புதிய பிக்சல் ஸ்மார்ட்போனின் சர்வதேச வெளியீட்டு விவரங்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ ஃபைண்ட் என் போன்றே உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிலும் கூகுளின் டென்சார் சிப்செட் வழங்கப்பட இருக்கிறது.
புதிய பிக்சல் நோட்பேட் மாடலின் விலை 1,399 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,04,500 என துவங்கும் என கூறப்படுகிறது. இந்த விலை அறிமுகத்தின் போது மாற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் ஃபோல்டு 3 ஸ்மார்ட்போனின் விலைலயை 1,799 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,34,300 என நிர்ணயம் செய்து இருந்தது. தற்போதைய தகவல்களின் படி பிக்சல் நோட்பேட் விலை மற்ற மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
எனினும், ஏற்கனவே வெளியான தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டு இருக்கிறது. மற்றப்படி இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ளே, கேமரா, மெமரி மற்றும் பேட்டரி விவவரங்கள் அனைத்தும் மர்மமாகவே இருக்கிறது. எனினும், இதில் பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் கூகுள் டென்சார் சிப்செட் வழங்கப்படும் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.