Flipkart இல் ஏற்கெனவே ஆஃபர் என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகள் எழுந்துள்ள நிலையில், தற்போது தரமற்ற பொருட்களை விற்று பணம் பறிப்பதாக பிரபல யூடியூபர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த மாதம் பிளிப்கார்ட் நிறுவனம் பிக்பில்லியன் டே சேல் என்ற பெயரில் ஆஃபர்களை அறிவித்திருந்தது. இதில் பிளிப்கார்ட் நடத்திய நாடகம் கொஞ்சநஞ்சமல்ல. இதுகுறித்து டெக் யூடியூபர்கள் உட்பட பலரும் பிளிப்கார்ட் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக டெக் ஷான், சிவபரணி உதயசெல்வன் யூடியூபர்கள் தாங்களும், தங்களைச் சார்ந்தவர்களும் எந்தஅளவில் நூதனமாக ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை ஆதாரங்களோடு நிரூபித்துள்ளனர்.
டெக் ஷான் என்பவர் பிளிப்கார்ட்டில் ஐபோன், இயர் பட்ஸ் ஆகியவை ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அவருக்கு பழைய பொருட்களே மீண்டும் பார்சல் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. இதை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும், பிளிப்கார்ட் தரப்பில் பெரிய அளவில் துரித நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதே போல், சிவபரணி உதய செல்வன் என்ற டெக் யூடியூபர், ஆரம்பம் முதலே பிளிப்கார்ட்டின் நாடக தந்திரங்கள், மோசடி நிலவரங்களை குற்றம்சாட்டி வருகிறார். சமீபத்தில் காமேஷ் என்பவருக்கு நேர்ந்த நூதன மோசடியையும், பிளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை அதிகாரியுடன் பேசிய ஆடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, காமேஷ் என்பவர் கேமரா லென்ஸ் ஆர்டர் செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால், தரமே இல்லாத, முற்றிலும் மங்கலான, பயன்படுத்தவே முடியாத லென்ஸ் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த காமேஷ் பிளிப்கார்ட்டை தொடர்புகொண்டு நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார். ஆனால், காமேஷ் ஆர்டர் செய்த பொருள், ரிட்டர்ன் செய்ய முடியாதவை என்ற பிரிவில் வருவதால், ரிட்டர்ன், ரீஃபண்டு செய்ய முடியாது என்று பிளிப்கார்ட் நிறுவனம் மறுத்துவிட்டது.
GB WhatsApp செயலியால் ஆபத்து! இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை!!
இதனை ஏற்றுக்கொண்ட காமேஷ், குறைந்தபட்சம் தரம் குறைந்த விற்பனையாளர் மீதாவது நடவடிக்கை எடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கும் பிளிப்கார்ட் தரப்பில் சரியான பதில் சொல்லாமல், மறுத்துவிட்டது.
எனவே, பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்வதற்கு முன்பு முடிந்த வரையில் தீர ஆய்வுக்கு பிறகு ஆர்டர் செய்யுமாறு யூடியூபர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.