டுவிட்டரில் ப்ளூ டிக் குறியீடை யார் வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்ற எலான் மஸ்க் அறிவிப்புக்கு ஒருசாரார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எலான் மஸ்க் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரபல முதலீட்டாளரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சுமார் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்கினார். அதன்பிறகு பல்வேறு மாற்றங்கள் டுவிட்டரில் அறிவிக்கப்பட்டன. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த ப்ளூ டிக் குறியீடை யார் வேண்டுமானாலும் பெறலாம் என்றும், இதற்கு மாதம் 8 டாலர் கட்டணம் என்றும் எலான் மஸ்க் அறிவித்தார்.
எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. குறை கூறுபவர்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். அதில், குறை கூறுபவர்கள் குறை கூறிக்கொண்டே இருக்கட்டும், ஆனால் 8 டாலர் என்ற கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு டீசர்ட்டின் விலை 58 டாலர் என்று விற்பனை செய்கிறார்கள், வெறும் 30 நிமிடங்கள் சிக்கன் சாப்பிடுவதற்கு 8 டாலர் கொடுக்கிறோம். ஆனால், 30 நாட்களுக்கு 8 டாலர் கொடுக்க முடியாதா? இவ்வாறு எலான் மஸ்க் மீம்ஸ் படங்களை பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
டுவிட்டரில் இனி யார் வேண்டுமானாலும் Blue Tick பெறலாம்; ஆனா ரூ. 660 செலுத்தனும் எலான் மஸ்க் அதிரடி!!
ப்ளூ டிக் பெறுவதால் விளம்பரங்கள் தொல்லை பெரிய அளவில் இருக்காது, அதிகாரப்பூர்வ நபராக அறிவிக்கப்படுவர், டுவிட்டர் அனாலிட்டிக்ஸ் அணுகுவதற்கான அனுமதி வழங்கப்படும், கூடுதலாக மேம்பட்ட பாதுகாப்பு, புதிய ஃபாலோயர்களைப் பெறலாம் என பல்வேறு பலன்களைப் பெற முடியும் என்று எலான் மஸ்க் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த 8 டாலர் கட்டணம் என்பது எலான் மஸ்க் தான் அறிவித்துள்ளார். டுவிட்டர் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கு முன்பு 20 டாலர் வசூலிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.