அதில் உடனே மின் கட்டணம் செலுத்தவில்லை எனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மின் இணைப்பு பயன்படுத்தி வரும் நுகர்வோரை குறி வைத்து மோசடி சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் இது தொடர்பான மோசடி சம்பவங்களில் சிக்கி பலர், லட்சக் கணக்கில் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். ட்விட்டரில் இந்த பிரச்சினை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதை அடுத்து மின் இணைப்பு தொடர்பான மோசடி வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது.
மோசடி செய்வோர் முதலில் எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸ்அப் மூலம் குறுந்தகவல் மூலம் கடந்த மாதம் மின் கட்டணம் செலுத்தவில்லை என கூறி, விரைவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த தகவலில் போன் நம்பர் ஒன்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் குறுந்தகவல் அனுப்புவோரிடம் பேசி அவரிடம் இருந்து பணம் பறித்து வருகின்றனர். இதன் மூலம் பொது மக்கள் பல லட்சம் ரூபாயை இழந்துள்ளனர்.
ட்விட்டரில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மின் கட்டணம் செலுத்தவில்லை என கூறி பொது மக்கள் இடம் இருந்து பணம் பறிக்கும் சம்பவங்கள் குஜராத், மகார்ஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் அதிகளவில் நடைபெற்று இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
போலி குறுந்தகவல் மின் துறை சார்பில் அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதில் உடனே மின் கட்டணம் செலுத்தவில்லை எனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் உடனே செலுத்துவதற்கு தொகை ஒன்றும் இடம்பெற்று இருக்கிறது. கடந்த சில நாட்களாக பலர் இவ்வாறு தாங்கள் ஏமாற்றப்பட்டதாக ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
எஸ்.எம்.எஸ். ஹெடர்கள் மூலம் ஹேக்கர்கள், பொது மக்களுக்கு மின் துறை சார்பில் அனுப்பப்படும் குறுந்தகவல் போன்ற ஒன்றை அனுப்பி இருக்கின்றனர் என முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இவ்வாறான ஹெடர்கள் எதுவும் மின்துறை சார்பில் அனுப்பப்படவில்லை. இவை பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தனிநபர்களால் அனுப்பப்பட்டு இருக்கிறது.
ஹேக்கர்கள் அனுப்பும் போலி தகவல்களை நம்பி யாரும் பணத்தை இழக்க வேண்டாம் என கூறும் தகவலை சைபர் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா சைபர் துறை, ஒடிஷா மின்துறை சார்பில் போலி தகவல்கள் பற்றி ட்விட்டரில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.