டெல்லியில் ஓடிபி இல்லாமலே, புதிய உத்தியை கையாண்டு வங்கிக் கணக்கில் இருந்து 50 லட்சம் ரூபாய் கொள்ளை போன சம்பவம் அரங்கேறியுள்ளது.
உங்கள் போனிற்கு வரும் OTPகளை யாருக்கும் பகிர வேண்டாம் என்ற எச்சரிக்கை அடிக்கடி கேட்டிருப்போம். போன் கால்/எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் OTP கேட்டு மேற்கொள்ளப்படும் ஆன்லைன் மோசடிகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த, சைபர் கிரைம் அதிகாரிகளால் இவ்வாறு எச்சரிக்கைப்பட்டு வருகிறது.
ஆனால், டெல்லியில் தற்போது ஓடிபி இல்லாமலே நூதன முறையில் வங்கி கணக்கில் இருந்த பணத்தை மோசடியாளர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பாதுகாப்பு சேவை மையத்தின் இயக்குநர் ஒருவருக்கு தான் இப்படியான சம்பம் நடந்துள்ளது.
அவருடைய போனிற்கு யாரோ ஒருவர் கால் செய்துள்ளார். ஆனால், போனை எடுத்தால் எதிர்முனையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இவ்வாறு சில மிஸ்டுகால்கள் வந்துள்ளன. பின்னர் சிறிது நேரம் கழித்து, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 12 லட்சம், 10 லட்சம் என சுமார் 50 லட்சம் ரூபாய் 4 பேரது கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவன உரிமையாளர், உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை வேட்டையில் இறங்கிய போலீசார், முதற்கட்டமாக இவருடைய பணம் டெபாசிட் ஆன அந்த 4 பேரை பிடித்துவிட்டனர். அவர்களிடம் விசாரணை செய்தததில், மோசடி கும்பல் இந்த நான்கு பேரை பகடை காயாக பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. மேலும், அந்த 4 பேருக்கும் குறிப்பிட்ட பணத்தை கமிஷனாக வழங்குவதாகவும் மோசடியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் Twitter Blue Subscription கட்டணம் எவ்வளவு? இதோ விலை விவரங்கள்
அதன்பிறகு தான் இந்த நூதன சம்பவம் குறித்து வெளிச்சத்துக்கு வந்தது. அதாவது, மோசடியாளர்கள் அந்த நிறுவன உரிமையாளர் எண் தங்களுடையது என்று கூறி, செல்போன் நெட்வொர்க்கிற்கு நூதன முறையில் நம்ப வைத்துள்ளனர். பின்னர், அவருடைய சிம் கார்டு எண்னையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கு சிம் ஸ்வாப் என்று பெயர் ஆகும்.
இந்த சிம் ஸ்வாப் முறையைப் பயன்படுத்தி நிறுவன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் மோசடியாளர்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே சிம் ஸ்வாப் முறையில் இதற்கு முன்பு ஜவுளி கடை அதிபர் ஒருவரது வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 1.8 கோடி ரூபாய் கொள்ளை போன சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.