அமேசான் தளத்தில் வாட்ச் முன்பதிவு செய்தவருக்கு போலி வாட்ச் வினியோகம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அமேசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விலை உயர்ந்த ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்தவருக்கு போலி வாட்ச் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டதும், பெட்டியை பிரிப்பதை வீடியோவாக பதிவு செய்த பெண், அதில் ஆப்பிள் வாட்ச் மாடலுக்கு பதில் போலி வாட்ச் இடம்பெற்று இருந்ததை பார்த்து அதிர்ந்து போனார். வீடியோ ஆதாரம் இருப்பதால் அமேசான் வினியோகத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது.
தான் ஏமாற்றப்பட்டதை சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர் டுவிட்டர் தளத்தில் பிதிவிட்டார். இவர் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 ஜி.பி.எஸ். மற்றும் செல்லுலார் மாடலை வாங்கி இருக்கிறார். இந்த வாட்ச் விலை ரூ. 50,999 ஆகும். முழு தொகையை இவர் ஏற்கனவே செலுத்தி இருக்கிறார். தனக்கு வந்த பார்செலில் சீனாவில் உருவாக்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் நகலுடன் வழங்கப்பட்ட சார்ஜிங் கேபிள் வித்தியாசமாக இருந்துள்ளது.
சம்பவம் குறித்து அமேசான் தளத்தில் புகார் அளித்த வாடிக்கையாளர் தனக்கு உண்மையான வாட்ச் டெலிவரி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார். இவருக்கு பதில் அளித்த அமேசான், ஆப்பிள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையத்தில் இருந்து தனக்கு வழங்கப்பட்ட சாதனத்தை ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தும் அறிக்கையை சமர்பிக்க வலியுறுத்தி இருக்கிறது.
ஆப்பிள் வழங்கிய அறிக்கையை அமேசானுக்கு அனுப்பி, தனக்கான சாதனத்தை டெலிவரி செய்ய பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் மீண்டும் அமேசான் தளத்தை தொடர்பு கொண்டிருக்கிறார். பின் ஆர்டர் பதிவு செய்வதாக அமேசான் தரப்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதுபற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதனால் மீண்டும் அமேசான் வாடிக்கையாளர் சேவை மையத்தை அவர் தொடர்பு கொண்டிருக்கிறார். இதற்கு அமேசான் சமூக வலைதள குழு இந்த விவகாரத்தை கையாளும் என பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. இறுதியில் வாடிக்கையாளருக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாக அமேசான் கூறி இருக்கிறது.