டீப்சீக், சீன AI சாட்பாட் இந்திய-சீன எல்லைப் பிரச்சினைகள், அமைச்சர் கிரண் ரிஜிஜு, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தியனன்மென் சதுக்க சம்பவம் போன்றவை குறித்து பதில் அளிப்பதைத் தவிர்க்கிறது.
சீன AI சாட்பாட் டீப்சீக் (DeepSeek), இந்தியாவில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், அரசியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து பதில் அளிப்பதைத் தவிர்க்கிறது. குறிப்பாக இந்திய-சீன உறவுகள் குறித்து பதில் அளிக்க முடியாது என்று கூறுகிறது.
சீன அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டுடன் இணைந்து செயல்படும் வகையில் டீப்சீக் உருவாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்துவரும் எல்லைப் பிரச்சினைகள், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக்கின் நிலை, அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு போன்றவை பற்றி உரையாடடுவதை டீப்சீக் சாட்பாட் தவிர்க்கிறது.
இந்தக் கட்டுப்பாடு இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பாலும் நீண்டுள்ளது. தைவானின் நிலை அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குறித்து கேள்வி எழுப்பினால், டீப்சீக் எந்த விதமான கருத்தையும் வழங்குவது இல்லை. 1989 தியனன்மென் சதுக்க ஒடுக்குமுறை மற்றும் அதன்பிறகு நடந்த படுகொலை நிகழ்வுகள் குறித்தும் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கிறது.
இந்திய-சீன எல்லைப் பிரச்சினை:
டீப்சீக்குடன் உரையாடியபோது, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தி, இந்திய-சீன எல்லைப் பிரச்சினைகள் குறித்து உரையாட முயன்றபோது, “மன்னிக்கவும், அது என் தற்போதைய எல்லைக்கு அப்பாற்பட்டது. வேறு ஏதாவது பற்றிப் பேசலாம்” என்று டீப்சீக் பதில் சொல்கிறது.
கிரண் ரிஜிஜு பற்றிய கேள்வி:
அடுத்து, “இந்தியாவின் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?” என்று கேட்டதற்கும் அதே போல வேறு விஷயத்தைப் பேசுவோம் என்றுதான் பதில் அளிக்கிறது. கேள்வி எளிமையாக்கி, “கிரேன் ரிஜிஜு யார்?” என்று கேட்டாலும், ஒரே மாதிதி பதில்தான் வருகிறது.
சீன அதிபர்ரைப் பற்றிய கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. “ஜி ஜின்பிங் யார்?” என்று கேட்டபோது, டீப்சீக் மீண்டும், “மன்னிக்கவும், அது என் தற்போதைய எல்லைக்கு அப்பாற்பட்டது. வேறு ஏதாவது பற்றிப் பேசலாம்" என்றுதான் பதில் கொடுக்கிறது.