பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4ஜி சேவை வெளியீடு பற்றிய புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். இந்தியாவில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்தியாவில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி நொட்வொர்க்கிற்கான கோர் நெட்வொர்க் டிரையலை பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெற்றிகரமாக செய்து முடித்து இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து ரேடியோ நெட்வொர்க் டிரையல்கள் பி.எஸ்.என்.எல். மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனைகளும் ஏழு அல்லது பத்து நாட்களுக்குள் நிறைவடைய இருக்கிறது. இரு டிரையல்களையும் நிறைவு செய்த பின் முக்கிய நகரங்களில் 4ஜி வெளியீடு துவங்கும்.
முதற்கட்டமாக எந்தெந்த நகரங்களில் 4ஜி சேவைக்கான உள்கட்டமைப்புகள் ஏற்கனவே மேம்படுத்தப்பட்டு இருக்கிறதோ, அந்த நகரங்களில் 4ஜி விரைந்து வெளியிடப்படும். 4ஜி சேவைகளை வழங்க ஏற்கனவே சுமார் ஒரு லட்சம் சைட்கள் தயார் நிலையில் இருப்பதாக பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முழுமையாக 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகள் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நிறைவு பெற்று விடும்.
2019 முதல் இந்தியாவில் 4ஜி சேவைகளை வெளியிட பி.எஸ்.என்.எல். முயற்சித்து வருகிறது. எனினும், உள்நாட்டு நிறுவனங்களின் உபகரணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசு விதிமுறையின் காரணமாக இந்த வெளியீடு தாமதமாகி இருக்கிறது. இந்த விதிமுறை காரணமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா, ஐ.டி.ஐ., எல். அண்ட் டி, மற்றும் ஹெச்.எஃப்.சி.எல். போன்ற நிறுவனங்களுக்கு பி.எஸ்.என்.எல். விருப்ப கடிதம் அனுப்பியது.
எனினும், டி.சி.எஸ். நிறுவனம் மட்டுமே கடிதத்திற்து பதில் அளித்தது. இதைத் தொடர்ந்து தான் 4ஜி நெட்வொர்க் சோதனை துவங்கியது. 4ஜி சேவைகளை வழங்கும் பட்சத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறும். மேலும் டி.சி.எஸ். நிறுவனத்திற்கும் இது பெரும் மைல்கல்லாக இருக்கும். முந்தைய தகவல்களின் படி பி.எஸ்.என்.எல். தனது 4ஜி சேவைகளை சுதந்திர தினத்தன்று துவங்கலாம் என தெரிகிறது.