தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களைப் பயன்படுத்தி வீடுகளுக்கு நிலையான பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதைப் போல மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
கிராமப்புறங்களில் இணையதள வசதியை மேம்படுத்துவதற்கான மிகப்பெரிய கிராமப்புற தொலைத்தொடர்பு திட்டமான பாரத்நெட் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ரூ.1.39 லட்சம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டம் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் பொதுச் சேவைகளை செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தில் முக்கிய மாற்றம் ஒன்றை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. 50:50 வருவாய் பகிர்வு அடிப்படையில் வீடுகளுக்கு ஃபைபர் இணைப்புகளைக் கொடுக்க, கிராம அளவிலான தொழில்முனைவோரை (VLE) பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
undefined
ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களைப் பயன்படுத்தி வீடுகளுக்கு நிலையான பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதைப் போல மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
தற்போது இத்திட்டத்தின் கீழ் சுமார் 1.94 லட்சம் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கிராமங்கள் அடுத்த 2.5 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த 2.5 ஆண்டுகளில் 6,40,000 கிராமங்களை இணைக்கும் முயற்சியில், நாட்டின் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கு ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் இணைப்புகள் வழங்குதல் மற்றும் பராமரித்தலில் கிராமப்புற தொழில்முனைவோரின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பாரத்நெட் திட்டத்தைப் பயன்படுத்தி தற்போது 3,51,000 ஃபைபர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த திட்டம் 2.5 லட்சம் வேலைவாய்ப்புகளையும் வழங்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
"நான்கு மாவட்டங்களில் ஒரு மாதிரித் திட்டத்தைச் செய்து, பின்னர் அதை 60,000 கிராமங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளோம். இதன் மூலம் உள்ளூர் தொழில்முனைவோரின் உதவியுடன் வீட்டிற்கு வீடு ஃபைபர் இன்டர்நெட் சேவையை எடுத்துச் செல்ல முடியும்" என்று அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகிறார். இதுவரை 60,000 கிராமங்களுக்கு 3.51 லட்சம் பிராட்பேண்ட் இணைப்புகளை வழங்க சுமார் 4,000 தொழில்முனைவோர் ஈடுபட்டுள்ளனர்.
2011இல் அமைச்சரவையால் முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிஎஸ்என்எல் (BSNL) உடன் இணைந்து பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் (BBNL) மூலம் செயல்படுத்தப்படுகிறது. 2017இல், இரண்டாம் கட்டம் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இரண்டு கட்டங்களிலும் இதுவரை ரூ.42,068 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தின் சராசரி இன்டர்நெட் பயன்பாடுக்கு மாதம் 175 ஜிபி வரை தேவைப்படுகிறது. மாதாந்திர பிராட்பேண்ட் திட்டத்தின் விலை ரூ.399 முதல் ஆரம்பிக்கிறது. ஓ.டி.டி. (OTT) சலுகைகளுடன் வினாடிக்கு 30 எம்பி வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா ரூ.799 வரை செல்கிறது.
பிபிஎன்எல் மற்றும் கிராம்ப்புற தொழில்முனைவோர் இடையே 50 சதவீத வருவாய்ப் பங்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை நாட்டில் 37 லட்சம் கிலோமீட்டர் (RKM) தொலைவுக்கு ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைப்பு போடப்பட்டுள்ளது. அதில், 7.7 லட்சம் தொலைவுக்கு பிபிஎன்எல் இணைப்பு கொடுத்திருக்கிறது.