ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டேக் வழங்கிய விவரங்களை வைத்துக் கொண்டு திருடனை போலீசார் கைது செய்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஆப்பிள் சாதனங்கள் மூலம் நன்மைகள் ஏற்பட்டதாக கூறும் சம்பவங்கள் ஏராளம் எனலாம். ஆப்பிள் வாட்ச் மாடல் வழங்கும் உடல்நலன் சார்ந்த எச்சரிக்கை தகவலால் உயிர் பிழைத்து இருப்பதாக பலர் கூறி உள்ளனர். இது போன்று ஆப்பிள் நிறுவன சாதனங்கள் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் நற்பெயர்களை பெற்று இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது ஆப்பிள் ஏர்டேக் இணைந்து உள்ளது. ஏர்டேக் வழங்கிய விவரங்களை வைத்துக் கொண்டு திருடனை போலீசார் கைது செய்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சார்லோட் மெக்னல்பர்க் காவல் துறை அதிகாரிகள் திருடன் ஒருவனை ஏர்டேக் வழங்கிய தகவல்களை பயன்படுத்தி கண்டுபிடித்து அசத்தினர். ஆப்பிள் நிறுவனத்தின் ஃபைண்ட் மை ஆப் பயன்படுத்தி காவல் துறை அதிகாரிகள் திருடன் மறைந்து இருந்த வீட்டின் முகவரியை மிக எளிதாக அறிந்து கொண்டனர். இதை அடுத்து காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதை அறிந்து கொண்ட திருடன், காவல் துறையினர் வருவதை பார்த்ததும், காரில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான்.
பையில் இருந்த ஆப்பிள் ஏர்டேக்:
தப்பிச் செல்லும் போதும், ஏர்டேக் வைக்கப்பட்டு இருந்த பையை அந்த திருடன் எடுத்துக் கொண்டு சென்றான். திருடன் தப்பிச் சென்ற நிலையிலும், காவல் துறை அதிகாரிகள் திருடனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். முன்னதாக பல்வேறு திருட்டு சம்பவங்களில் சிக்கிய மிஸ்டர் கிரீன் இதுவரை ஐந்து முறை கைதாகி சிறை சென்று இருக்கிறான்.
ஆப்பிள் ஏர்டேக் மூலம் கிடைத்த தகவல்களை பயன்படுத்தி நடைபெற்ற பல்வேறு வெற்றி கதைகளில் இந்த சம்பவமும் தற்போது இணைந்து இருக்கிறது. முன்னதாக பல முறை ஆப்பிள் ஏர்டேக் வழங்கிய விவரங்களை கொண்டு தவறுகள் நடக்காமல் தவிர்க்க செய்யப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போன பொருட்களையும் கண்டுபிடிக்க ஆப்பிள் ஏர்டேக் பல முறை உதவி இருக்கிறது. இதற்காகவே இந்த சாதனத்தை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி விற்பனையும் செய்து வருகிறது.
ஆப்பிள் ஏர்டேக்:
முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள் ஏர்டேக் சாதனத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்து இருந்தது. இதனை உங்களின் சாவி, பை, என எதில் வேண்டும் என்றாலும் இணைத்து வைத்துக் கொள்ளலாம். பின் ஏர்டேக் எங்கு இருக்கிறது என்ற விவரங்களை ஆப்பிள் பைண்ட் மை நெட்வொர்க் மூலம் கண்டறிந்து கொள்ள முடியும்.
வெற்றிக் கதைகள் மட்டும் இன்றி ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டேக் கொண்டு மக்கள் உளவு பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆப்பிள் ஏர்டேக் பில்ட்-இன் ஆண்டி-ஸ்டாக்கிங் அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடனஅ கிடைக்கிறது. பல்வேறு சாப்ட்வேர் அப்டேட்கள் மூலம் ஆப்பிள் ஏர்டேக் பயன்பாடுகளை பெருமளவு மாற்றியும், மேம்படுத்தியும் இருக்கிறது. இதன் மூலம் இந்த சாதனத்தை தீய காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்க ஆப்பிள் முயற்சி செய்து வருகிறது.