ஆப்பிள் நிறுவனம் அடுத்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட இருக்கும் ஐபோன்களுடன் இயர்பாட்ஸ் வழங்குவதை நிறுத்துகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுடன் இயர்பாட்ஸ் வழங்குவதை நீண்ட காலம் முன்பே நிறுத்திவிட்டது. எனினும், பிரான்ஸ் நாட்டில் மட்டும் ஐபோன்களுடன் இயர்பட்ஸ்-ஐ வழங்கி வந்தது. அந்நாட்டில் விதிக்கப்பட்டு இருந்த சட்ட விதிகள் காரணமாக இந்த நடவடிக்கையை ஆப்பிள் கடைப்பிடித்து வந்தது. எனினும், தற்போது பிரான்ஸ் நாட்டு சட்ட விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து ஆப்பிள் இனிமேல் ஐபோன்களுடன் இயர்பாட்ஸ்-ஐ கட்டாயம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. அதன்படி ஜனவரி 24, 20222 முதல் வினியோகம் செய்யப்படும் ஐபோன்களுடன் ஆப்பிள் இயர்பாட்ஸ்-ஐ வழங்காது என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஸ்மார்ட்போன்களுடன் கட்டாயம் ஹெட்போன்களை வழங்க வேண்டும் என்ற சட்ட விதிகள் தற்போது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மாற்றப்பட்டு இருக்கிறது.
2020 ஆம் ஆண்டு முதல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இயர்பாட்ஸ் மற்றும் சார்ஜிங் ப்ரிக் உள்ளிட்டவைகளை ஐபோன்களுடன் வழங்குவதை ஆப்பிள் நிறுத்தியது. ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் இவை இரண்டும் வழங்கப்படவே இல்லை. இதனால் ஐபோன் பாக்ஸ் அளவும் குறைந்துவிட்டது.
பிரான்ஸ் நாட்டு சட்ட விதிகள் ஆப்பிள் மட்டுமின்றி அனைத்து ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கும் பொருந்தும். சட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளதை அடுத்து ஹெட்போன்களை ஸ்மார்ட்போன்களுடன் வழங்கவில்லை என்ற போதும், அவை தனியே விற்பனைக்கு கிடைக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் வழி செய்ய வேண்டும்.
பிரென்ச் நாட்டை சேர்ந்த பிரான்க் நிறுவனம் தங்களின் ஸ்டோரில்: "அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, எங்களின் உற்பத்தியாளர்கள் இனிமேல் ஹெட்போன்கள் / ஹேண்ட்ஸ்-ஃபிரீ கிட்களை ஸ்மார்ட்போன்களுடன் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் புதிய சட்ட விதிகள், பிரான்ஸ் நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இயற்றப்பட்டுள்ளன," என தெரிவித்துள்ளது.
ஜனவரி 17, 2022 முதல் சியோமி விற்பனை செய்யும் ஸ்மார்ட்போன்களுடன் ஹெட்போன்கள் வழங்குவதை நிறுத்தியது. இதே வழிமுறையை ஆப்பிள் ஜனவரி 24, 2022 முதல் கடைப்பிடிக்க இருக்கிறது. தற்போது ஆப்பிள் பிரான்ஸ் வலைதளத்தில் ஐபோன் மாடல்களுடன் இயர்பாட்ஸ் மற்றும் யு.எஸ்.பி.-சி டு லைட்னிங் கேபில் இடம்பெற்று இருக்கிறது. எனினும், விரைவில் இது மாற்றப்பட்டு விடும்.
துவக்கத்தில் ஆப்பிள் மேற்கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை உலகம் முழுக்க பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. எனினும், தற்போது இதே நடவடிக்கையை பல்வேறு பிரீமியம் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் கடைப்படிக்க துவங்கி விட்டன.
இது ஒருபக்கம் இருந்தாலும், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 மாடல்களுடன் சார்ஜர் வழங்காததற்கு பிரேசில் நாட்டு அரசாங்கம் ஆப்பிள் மீது 1.9 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 14,13,27,130 அபராதம் விதித்தது. பின் சார்ஜரை கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு அதனை வழங்க ஆப்பிள் கட்டாயப்படுத்தப்பட்டது.