நீங்கள் வழங்கிய அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியால் தான் எங்களால் சரியான நேரத்திற்கு மருத்துவமனை செல்ல முடிந்தது. தற்போது அவர் ஆரோக்கியமாக இருக்கிறார்.
பயனர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த பலன்களை வழங்குவதில் ஆப்பிள் வாட்ச் உலகம் முழுக்க மிகவும் பிரபலமான சாதனமாக அறியப்பட்டு வருகிறது. ஆப்பிள் வாட்ச் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் உயர் ரக சென்சார்கள் மற்றும் ஏராளமான ஆரோக்கியம் சார்ந்த அம்சங்கள் பயனர்களின் உடல்நலம் பற்றி எந்நேரமும் சோதனை செய்து, ஆபத்து காலத்தில் உடல்நிலையை விரைந்து பரிசோதனை செய்ய வலியுறுத்தி வருகிறது.
இந்த அம்சங்களால் கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுக்க பலர் உயிர் தப்பி இருக்கின்றனர். உடல்நலனை காத்தில் பறக்கவிட்டு மற்ற அலுவல்கள் மீது அதிக கவனம் செலுத்தி வரும் பலருக்கு ஆப்பிள் வாட்ச் தக்க நேரத்தில் எச்சரிக்கை கொடுத்து இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கையை அடுத்து உடனடியாக மருத்துவமனை விரைந்த பயனர்கள் இன்றளவும் தாங்கள் உயிருடன் இருப்பதற்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவரின் உயிரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றி இருக்கிறது. ஹரியானா மாநிலத்தின் யமுனா நகர் பகுதியில் மல் மருத்துவராக பணியாற்றி வருபவர் நிதேஷ் சோப்ரா. இவர் தனது மனைவிக்கு கடந்த ஆண்டு புத்தம் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலை பரிசளித்தார். இந்த நிலையில், நிதேஷ் சோப்ராவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.
கணவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, பதட்டம் அடைந்த நிதேஷ் சோப்ராவின் மனைவரி தனது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலை கொடுத்து உடனடியாக இ.சி.ஜி. டெஸ்ட் எடுக்க வலியுறுத்தினார். ஆப்பிள் வாட்ச் மாடலில் மேற்கொள்ளப்பட்ட இ.சி.ஜி. பரிசோதனையில் நிதேஷ் சோப்ராவின் உடல்நிலையில் ஏதோ பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று நிதேஷ் சோப்ராவை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
மருத்துவ பரிசோதனையில் நிதேஷ் சோப்ராவின் இதயத்துக்கு செல்லும் இரத்த குழாய்களில் 99.9 சதவீதம் அடைப்பு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து உடனடியாக நிதேஷ் சோப்ராவுக்கு சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இரத்த குழாய்களில் இருந்த அடைப்புகள் சரி செய்யப்பட்டன. பின் சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் நிதேஷ் சோப்ரா வைக்கப்பட்டார்.
இதை அடுத்து அவரின் உயிருக்கு ஏற்பட இருந்த பேராபத்து ஆப்பிள் வாட்ச் உதவியால் தக்க நேரத்தில் சரி செய்யப்பட்டது. ஆப்பிள் வாட்ச் வழங்கிய அதிநவீன தொழில்நுட்ப உதவி கண்டு அதிர்ந்து போன நிதேஷ் சோப்ராவின் மனைவி, ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிற்கு மின்னஞ்சலில் நன்றி தெரிவிக்க முடிவு செய்தார்.
"நீங்கள் வழங்கிய அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியால் தான் எங்களால் சரியான நேரத்திற்கு மருத்துவமனை செல்ல முடிந்தது. தற்போது அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். எனது கணவரை காப்பாற்றிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் மீது எப்போதும் அன்பு இருக்கும். உங்களுக்கு மகிழ்ச்சி மட்டுமே கிடைக்க மனதார வாழ்த்துகிறேன்," என நிதேஷ் சோப்ராவின் மனைவி டிம் குக்கிற்கு எழுதிய மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருந்தார்.
இவர் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் எழுதிய டிம் குக், "மருத்துவ கவனம் பெற்று உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. ஆரோக்கியமாக வாழுங்கள். டிம்," என குறிப்பிட்டு இருந்தார்.