Apple event: மார்ச் 8 ஆம் தேதி நிகழ்வு நடைபெற இருப்பதை ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் மார்ச் 8 ஆம் தேதி புதிய ஐபோன் SE மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக இணையத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன். தற்போது இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் ஆப்பிள் மார்ச் 8 நிகழ்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மார்ச் 8 ஆம் தேதி Peek Performance பெயரில் ஆப்பிள் நிகழ்வு நடைபெற இருக்கிறது.
முந்தைய தகவல்களின் படி இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் SE 5ஜி மாடல், புதிய ஐபேட் ஏர், மேக் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யும் என தெரிகிறது. ஆப்பிள் நிகழ்வு நிறைவுற்றதும் ஐ.ஓ.எஸ். 15.4 ஸ்டேபில் அப்டேட் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
undefined
ஆப்பிள் நிகழ்வை அறிவிக்கும் டீசரில் பல்வேறு நிறங்களால் ஆன ஆப்பிள் லோகோ, Peek Performance வார்த்தை இடம்பெற்று இருக்கிறது. இந்த வார்த்தைக்கு ஏற்ப புது சாதனங்களின் செயல்திறன் இருக்கும் என எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டு மார்ச் மாத நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐமேக், ஐபேட் ப்ரோ, ஐபோன் 12 பர்பில் நிற வேரியண்ட், ஏர்டேக், ஆப்பிள் டி.வி. 4K உள்ளிட்டவைகளை அறிவித்தது.
அந்த வகையில் தற்போதைய ஆப்பிள் Peek Performance நிகழ்வில் ஐபோன் 13 புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களின் படி புதிய ஐபோன் SE மாடலில் ஏ15 பயோனிக் சிப்செட், 5ஜி வசதி, ஐபோன் SE 2 போன்ற தோற்றம், ஹோம் பட்டனில் டச் ஐ.டி. சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் SE விலை முந்தைய ஐபோன் SE மாடலை விட 100 டாலர்கள் குறைவாகவே இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
2022 ஐபோன் SE வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் SE 2020 விலை 199 டாலர்களாக குறைக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்களை ஐ.ஓ.எஸ். தளத்திற்கு மாற்ற வைக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை ஆப்பிள் ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்ற பகுதிகளில் செயல்படுத்த இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.